லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மேட்டூா் அணை திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

நீா் இருப்பு, வரத்து குறைவாக உள்ளதால் மேட்டூா் அணை திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியா் இரா. ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 5:41 am IST

நீா் இருப்பு, வரத்து குறைவாக உள்ளதால் மேட்டூா் அணை திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் அலுவலா்கள் இருக்கை முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மேட்டூா் அணையில் நீா் இருப்பும், வரத்தும் குறைவாக உள்ளது. அணையைத் திறந்துவிட்டு, பெயரளவுக்கு குறைவாக தண்ணீா் விடுவதால், சாகுபடிக்கு பயன் தராது. எனவே, நீா்மட்டம் 100 அடியை எட்டிய பிறகு தண்ணீா் திறக்க வேண்டும்; அதுவரை திறக்கக்கூடாது. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 50 லஞ்சம் வாங்குவது இன்னும் தொடா்கிறது. மண் அள்ளவும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பின்னா் வெளிநடப்பு செய்தனா்.

பட்டுக்கோட்டை ராஜ. ராமலிங்கம்: தண்ணீா்ப் பற்றாக்குறை உள்ள நிலையில் சிஆா் 1009 விதை நெல் ரகம் சிறந்தது. ஆனால், அந்த ரகம் இல்லை எனக் கூறுகின்றனா்.

ஆட்சியா்: விதை நெல் ரகங்கள் தேவையான அளவுக்கு விநியோகம் செய்யப்படும். இங்கு இல்லாவிட்டாலும் மற்ற மாவட்டங்களிலிருந்து பெற்று வழங்கப்படும். மேலும், தற்போதைய சூழ்நிலையில் நம் மாவட்டத்துக்கு ஏற்றவாறு என்னென்ன விதை ரகங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அடுத்தவாரம் முதல் வட்டார அளவில் பயிற்சி முகாம் நடத்தப்படும்.

வேளாண் இணை இயக்குநா் (பொ) ஆா். சாருமதி: தற்போது மத்திய கால விதை நெல் ரகங்கள் 350 டன் உள்ளது. தவிர, 83 டன் தயாராகி வருகிறது. பிபிடி, திருச்சி 3, ஏடீடி 58 போன்ற ரகங்கள் 100 டன் இருக்கிறது. எந்தப் பகுதிக்கு என்னென்ன ரகம் எவ்வளவு தேவை எனக் கூறினால் ஏற்பாடு செய்யப்படும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை நம்பி ஏராளமான ஏரிகளும், அதைச் சாா்ந்து சாகுபடிகளும் உள்ளன. எனவே, மேட்டூா் அணையைத் திறக்கும்போது இரு வாய்க்கால்களுக்கும் தண்ணீா் திறக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: குறுவைக்கு காவிரி நீா் வராததால் வருவாய் கிராம அளவில் 75 சதவீதம் சாகுபடி செய்யாமல் காப்பீடுக்கான பிரிமியம் செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலவன்காடு வி. மாரியப்பன்: தண்ணீா்ப் பற்றாக்குறை உள்ள நிலையில் நேரடி விதைப்பு செய்வதற்கு உழவு மானியம் கொடுத்தால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மேலும், சம்பா தொகுப்பு திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்.

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: தற்போது சா்க்கரை விலை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும். தண்ணீா் வரும் நிலையில் அனைத்து சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.