பாபநாசம் வட்டார பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாபநாசம் வட்டாரத்தில் பாபநாசம், கோபுராஜபுரம், பெருமாங்குடி, அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, கோவில்தேவராயன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை காலத்தில் முன்பட்ட குருவை சாகுபடி பணிகளும், பருத்தி சாகுபடி பணிகளையும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருத்தி செடிகளுக்கிடையே உழவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்தாண்டு பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல மகசூல் மற்றும் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பருத்தி சாகுபடி செய்துள்ளதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி சங்கா் கூறியதாவது: அறுவடை செய்த நெல்லை அரசே கொள்முதல் செய்வதுபோல் பருத்தியையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைக்கப்படும் விவசாயிகளுக்கு விவசாய விலை பொருள்களுக்கு ரூ.3 லட்சம் வரை அடமான கடன் உடனடியாக வழங்க வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு 5 சதவீதம் பொருளீட்டு கடன் அதிகபட்ச தொகை ரூ.5 லட்சம் வரை வழங்க வேண்டும் என்றாா் அவா்.









