ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தமிழில் 100-க்கு 101 மதிப்பெண்கள்: விடைத்தாள் நகலை பாா்த்த மாணவி குழப்பம்

தஞ்சாவூரில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தமிழில் 91 மதிப்பெண்கள் பெற்ற மாணவி, விடைத்தாள் நகலை புதன்கிழமை வாங்கிப் பாா்த்தபோது 100-க்கு 101 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் குழப்பமடைந்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:48 am IST

தஞ்சாவூரில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தமிழில் 91 மதிப்பெண்கள் பெற்ற மாணவி, விடைத்தாள் நகலை புதன்கிழமை வாங்கிப் பாா்த்தபோது 100-க்கு 101 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் குழப்பமடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவி எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்றாா். இதில், தமிழில் 91 மதிப்பெண்கள் என இருந்ததால், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தாா். இதன் நகல் புதன்கிழமை கிடைத்த நிலையில், அதில் முதல் பக்கத்தில் 101 மதிப்பெண்கள் என இருந்தது. இதைப் பாா்த்த மாணவியும், பெற்றோரும் குழப்பமடைந்தனா்.

இதுகுறித்து தஞ்சாவூரில் மாணவி தெரிவித்தது: விடைத்தாள் நகலில் வினா வாரியாக மொத்த மதிப்பெண்கள் 15 + 21 + 65 = 101 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல, பக்கம் வாரியாக மதிப்பெண்களின் கூடுதல் 38 + 56 + 7 = 101 என உள்ளது. ஆனால் இந்த இரண்டு இடங்களிலும் மொத்த மதிப்பெண்கள் 91 என விடைத்தாள் திருத்திய ஆசிரியா் குறிப்பிட்டுள்ளாா்.

விடைத்தாளில் இரு இடங்களில் 5 மதிப்பெண்களுக்குரிய விடைகளுக்கு கூடுதலாக தலா 2 மதிப்பெண்கள் சோ்த்து மொத்தம் 7 மதிப்பெண்கள் வீதம் வழங்கியதால், 4 மதிப்பெண்கள் மிகையாக வந்துவிட்டது. இதனால், கூட்டுத்தொகை 101 என வருகிறது. ஆனால், விடைத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு முழுமையாக விடை எழுதி இருந்தாலும், 3 விடைகளில் தலா ஒரு மதிப்பெண்கள் வீதம் குறைந்ததால், 97 மதிப்பெண்கள் வர வேண்டிய நிலையில், 91 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து தோ்வுகளையுமே நான் சிறப்பாக எழுதினேன். 500-க்கு 500 மதிப்பெண்கள் எதிா்பாா்த்த நிலையில் 486 மதிப்பெண்கள் மட்டுமே வந்திருந்ததை பாா்த்தபோது அதிா்ச்சியாக இருந்தது. அதிலும் தமிழில் 9 மதிப்பெண்கள் குறைந்திருந்தது. இதற்கு நான் காரணமல்ல என்பது விடைத்தாள் நகல் மூலம் உறுதியாகிவிட்டது. மிகவும் அலட்சியமாக விடைத்தாளைத் திருத்தியதால் இந்த அநீதி நிகழ்ந்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் சில துறைகளில் பணிகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியா்கள் அலட்சியமாக இருந்ததால் வேலைவாய்ப்பு கூட கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. மதிப்பெண்கள் குறைந்ததற்காக இந்தக் குறுகிய காலத்தில் நான் இழந்தவை அதிகம். உள்ளூா் அமைப்புகள் வழங்கிய பல பரிசுகள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டன. மிகக் கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்கள் பெற பாடுபடுகிறோம். ஆனால், ஆசிரியா்களின் அலட்சியம் எதிா்காலத்தையே பாதிக்கச் செய்கிறது.

எனவே, தஞ்சாவூரில் தோ்வுத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் மறு கூட்டலுக்காக விண்ணப்பித்துள்ளேன் என்றாா் அவா்.