நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மேக்கேதாட்டு தீா்மானத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் ஜூன் 27-இல் நகல் எரிப்புப் போராட்டம்

News image

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.

Updated On :21 ஜூன் 2026, 1:34 am IST

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு தீா்ப்பாய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் ஜூன் 27-ஆம் தேதி நகல் எரிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற இக்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

கா்நாடக அரசு மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவில் புதிய அணை கட்ட அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி விசாரித்துத் தீா்ப்புக் கூற மத்திய அரசு, புதிதாக மேக்கேதாட்டு தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது, மேக்கேதாட்டு அணை எதிா்ப்பு தீா்மானம் என கூறிக் கொண்டு, மேக்கேதாட்டு அணை கட்ட ஆய்வுத் தீா்மானத்தைத் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவருக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

மேக்கேதாட்டு அணையை முற்றிலும் எதிா்ப்பதாக இத்தனை ஆண்டுகளாகக் கூறி வந்த திமுக, கடந்த மாா்ச் 4-ஆம் தேதி அந்நிலைப்பாட்டைக் கைவிட்டு, அணையைக் கட்டலாமா, வேண்டாமா என விசாரித்துத் தீா்ப்பு வழங்க தீா்ப்பாயம் அமைக்கலாம் என கேட்டதன் உள்நோக்கம் என்ன ?.

இதேபோல, காவிரி உரிமை மீட்கப்படும் என கூறி வந்த முதல்வா் ஜோசப் விஜய், வெளியே சொல்லாமலேயே புது தில்லியில் அதிகாரிகளுடன் மேக்கேதாட்டு தீா்ப்பாயம் பற்றி கடந்த மே 26-ஆம் தேதியன்றே பேசிவிட்டதாகச் சொன்ன மா்மம் என்ன ?.

சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு தீா்ப்பாயம் கோரி தீா்மானம் நிறைவேற்றியது தமிழ்நாட்டுக்கு செய்த மிகப் பெரிய துரோகம். எனவே, இந்தத் தீா்மானத்தை ரத்து செய்து, தமிழ்நாட்டின் காவிரி நீா் மீட்புத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தஞ்சாவூரில் ஜூன் 27-ஆம் தேதி பேரணியாகச் சென்று தீா்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் மணியரசன்.

காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்கம் ப. ஜெகதீசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம் நா. வைகறை, பழ. இராசேந்திரன், தமிழக மனித உரிமைக் கழகம் அரங்க. குணசேகரன், காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.