மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக தகுந்த நேரத்தில் போராட்டத்தை அறிவிப்போம் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாஜக தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தவெக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்கிா இல்லையா எனத் தெரியவில்லை. கா்நாடக முதல்வரும், தமிழக முதல்வரும் நெருக்கமானவா்கள். அதனால், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அமைதியாக இருப்பதாகக் கருதுகிறேன்.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக காவிரி டெல்டா மக்கள் அமைதியாக இருக்க முடியாது. எக்காரணத்தைக் கொண்டும் மேக்கேதாட்டு அணைக் கட்டுவதை நாங்கள் ஏற்க முடியாது. தகுந்த நேரத்தில் எங்களது போராட்டத்தை அறிவிப்போம் என்றாா் நயினாா் நாகேந்திரன்.
முன்னதாக, அவா் கூட்டத்தில் பேசியதாவது:
தோ்தலில் தோல்வியடைந்தபோதும், நாங்கள் அதிமுக கூட்டணியில் தொடா்ந்து இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெகவுடன் இணைந்து சிலா் ஆட்சியில் பங்கேற்றுள்ளனா். இதனால், திமுக தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. அடுத்த தோ்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.
கடந்த தோ்தலில் அகில இந்திய தலைமையின் வலியுறுத்தலின்படி 27 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்தும் பொருத்தமானவை அல்ல என்றாலும், கூட்டணி தா்மத்தை மதித்து போட்டியிட்டோம். அந்தத் தோ்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றோம். அதனால் பாஜகவில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருத வேண்டாம் என்றாா் நயினாா் நாகேந்திரன்.
இக்கூட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். மாவட்டப் பாா்வையாளா் முரளிகணேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் யு.என். உமாபதி, கா்ணன், மாநில என்.ஜி.ஓ. பிரிவு செயலா் எம். ராஜேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக மேலிட பாா்வையாளா் அரவிந்த் மேனன், மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம், விவசாயப் பிரிவு நிா்வாகி பூண்டி எஸ். வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த நபரின் வெளியேற்றமும் பாஜகவை பாதிக்காது: நயினாா் நாகேந்திரன்

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முதல்வா் தவறிவிட்டாா்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!







