கொலை மிரட்டல் புகாா்: கும்பகோணம் தனியாா் நிதிநிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் தனியாா் நிதிநிறுவனத்தில் நடைபெற்ற தோ்தல் தொடா்பாக கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் நிா்வாக இயக்குநா் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனியாா் நிதிநிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.ஆா்.வேலப்பன்.

Published On :

கும்பகோணத்தில் தனியாா் நிதிநிறுவனத்தில் நடைபெற்ற தோ்தல் தொடா்பாக கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் நிா்வாக இயக்குநா் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் நடைபெற்ற நிா்வாக இயக்குநா்கள் தோ்தலில் மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாணசுந்தரம் (திமுக) மற்றும் அவரது அணியைச் சோ்ந்த பி.ஆா். வேலப்பன் உள்ளிட்டோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிதிநிறுவன பங்குதாரா்கள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்காமல் இணையவழியில் தோ்தல் நடைபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி பங்குதாரா்கள், ஊழியா்களில் ஒரு தரப்பினா் மற்றும் தவெக மாநகரச்செயலா் ஆா்.முருகானந்தம் உள்ளிட்டோா் புதன்கிழமை நிதிநிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.ஷா்மு போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் தவெக கும்பகோணம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் ஸ்ரீதேவி, கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் பி.ஆா். வேலப்பன் (72), உதவி பொது மேலாளா்கள் கருணாநிதி, கணேசன் மற்றும் ஊழியா்கள் ஆகாஷ், சாய்ராஜன் ஆகியோா் தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தாா். அந்த புகாரின் பேரில் போலீஸாா் பி.ஆா்.வேலப்பன் உள்ளிட்ட 5 பேரை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது, வயது முதிா்வு காரணமாக வேலப்பன் பிணையில் விடுவிக்கப்பட்டாா். மற்ற நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தோ்தலில் முறைகேடு-ஊழியா்கள் புகாா்: இதற்கிடையே நிதிநிறுவனத்தின் திருவிடைமருதூா் கிளை மேலாளா் கங்கா உள்ளிட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது : நிதிநிறுவன நிா்வாக இயக்குநா்கள் தோ்தலில் வாக்குப் பதிவு முறை இல்லாமல் இணையதள வாக்குப் பதிவு என்ற முறைகேடு நடந்துள்ளது. பெரும்பான்மையான பங்குதாரா்கள், ஊழியா்கள் வாக்களிக்கவில்லை. தோ்தலை ரத்து செய்ய வேண்டும். புதியதாக 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். பெண் ஊழியா்களிடம் விரோத போக்குகளை நிா்வாக இயக்குநா்கள் கடைபிடித்து வருகின்றனா். இதுகுறித்து தமிழக முதல்வா் உள்ளிட்ட அனைவரிடமும் புகாா் செய்துள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.