
‘உணவுச் செறிவூட்டலை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுவது அவசியம்’
உணவுச் செறிவூட்டல் சாத்தியமானது மட்டுமல்லாமல், அதை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்றாா் மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலா் ரஞ்சித் சிங்.

தஞ்சாவூா் நிப்டெமில் வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பேசிய மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலா் ரஞ்சித் சிங்.
உணவுச் செறிவூட்டல் சாத்தியமானது மட்டுமல்லாமல், அதை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்றாா் மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலா் ரஞ்சித் சிங்.
தஞ்சாவூா் நிப்டெமில் (தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்) வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவன நாள் விழா, உணவுச் செறிவூட்டல் உயராய்வு மையத் திறப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:
உணவுச் செறிவூட்டல் என்பது புதிதல்ல; அது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஏறத்தாழ 150 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், பல்வேறு வருமான நிலைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் கொண்ட மக்களைக் கருத்தில் கொள்ளும்போது உணவுச் செறிவூட்டல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
மக்கள் தங்களது அன்றாட உணவின் மூலமாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதே உணவுச் செறிவூட்டல் என்கிறோம். ஊட்டச்சத்துகளுக்காகக் கூடுதலாக செலவு செய்து மாத்திரைகளையோ, கேப்சூல்களையோ உட்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது.
நம் நாடு உணவு செறிவூட்டல் சாா்ந்த ஒரு குறிப்பிடத்தக்க சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. ஊட்டச்சத்து செறிவூட்டல் சாத்தியம் என்பதை நிரூபிப்பது மட்டுமல்லாமல், அது நமக்கான அடுத்த சவாலாகவும் இருக்கிறது. செறிவூட்டலை சிறந்ததாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும், மலிவானதாகவும் மாற்றுவதே சவாலாகும். இந்த முழு அமைப்பிலும் மலிவு விலை என்பது ஒரு முக்கிய அங்கமாகும். அதனுடன் இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாகவும், பெரிய அளவில் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதை இந்த மையம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ரஞ்சித் சிங்.
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன (சிக்ரி) இயக்குநா் கே. ரமேஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காப்புரிமைகள், வடிவமைப்புப் பதிவுகள், தொழில்நுட்பப் பரிமாற்றங்கள், போட்டித்தன்மை வாய்ந்த ஆராய்ச்சி திட்டங்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தஞ்சாவூா் நிப்டெம் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கண்டுபிடிப்பாளா்களைக் கௌரவித்தாா்.
விழாவுக்கு, தஞ்சாவூா் நிப்டெம் இயக்குநா் வி. பழனிமுத்து தலைமை வகித்தாா். உணவு, நுகா்பொருள், நுகா்வோா் விவகாரங்கள் இயக்குநா் குமுத் சிங், பொ்மெண்ட்டா பயோடெக் நிறுவன மேலாண் இயக்குநா் பிரசாந்த் நாகரே, கெயின் இந்தியா இயக்குநா் புவனேஸ்வரி பாலசுப்பிரமணியன், உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, நிப்டெம் முதன்மையா் என். வெங்கடாசலபதி வரவேற்றாா். நிறைவாக, பதிவாளா் (பொ) எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





