தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் செப்.9-இல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 1:18 am IST

பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில் வழித்தடத்தில் புதன்கிழமை (செப்.9) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ரயில் பாதைகளை விட்டு விலகியிருப்பதோடு, கால்நடைகளை பாதுகாப்பாக ரயில் வழித்தடப் பகுதிகளுக்கு செல்லாதவாறு வைத்திருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

பட்டுக்கோட்டை-காரைக்குடி ரயில் பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், செப்.9-ஆம் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளா் தலைமையிலான ரயில்வே துறை உயா் அதிகாரிகள் குழு அன்றைய தினம் இந்தப் பாதையை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனா்.

மின்மயமாக்கப்பட்ட இந்தப் பாதையில் கடந்த 2-ஆம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, செப்.9-ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆய்வும், அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெற உள்ளது.

பிற்பகலில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்:

புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி மாலை 4.20 மணி வரை, பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை மின்சார இன்ஜின் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தின்போது, பாதையின் பாதுகாப்புத் தன்மை, மின்பாதை அமைப்புகளின் செயல்திறன் மற்றும் ரயிலின் வேகத் திறன் ஆகியவை முழுமையாகப் பரிசோதிக்கப்படும்.

முழு மின்சார ரயில் இயக்கம் எப்போது?:

அதிவேக சோதனை ஓட்டத்துக்குப் பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முறையான ஒப்புதல் பெறப்பட்டு, அதன்பின், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் முழுமையாக மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தின் அனைத்து அகலப்பாதை (பிராட்கேஜ்) வழித்தடங்களும் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட மாநிலம் என்ற நிலையை தமிழ்நாடு அடையும்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

செப்.9-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, கண்டனூா்-புதுவயல், காரைக்குடி வரையிலான ரயில் பாதையின் அருகிலோ அல்லது பாதையைக் கடக்கும் இடங்களிலோ பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாடக் கூடாது என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

மின் பாதையில் அதிக மின்னழுத்தம் பாய்வதால், பொதுமக்கள் விலகி இருக்குமாறும், ரயில்வே கேட் மற்றும் கடவுப் பாதைகளில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.