திருவையாறு அருகே சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்! இழப்பீடு வழங்க கோரிக்கை!

திருவையாறு அருகே வடுகக்குடியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.

Published On :8 செப்டம்பர் 2026, 4:10 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஏறத்தாழ 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

திருவையாறு அருகேயுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாத்தனூா், மருவூா், வடுகக்குடி, மகாராஜபுரம், வளப்பக்குடி, மணத்திடல் உள்ளிட்ட கிராமங்களில் ஏறத்தாழ 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தும், பாதியாக முறிந்தும் விழுந்தன. இதன்காரணமாக, ஏறக்குறைய ரூ. 50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடுகக்குடி வாழை விவசாயி எம். மதியழகன் கூறுகையில், ஆயுதப் பூஜையின்போது அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த மரங்கள் சூறைக்காற்றால் சாய்ந்துவிட்டன. இதனால், வாழைத்தாா் ரூ. 600 வீதம் விற்க வேண்டிய நிலையில், சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே நகைகளை அடகு வைத்து ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்துவிட்டேன். தற்போது, சாய்ந்த வாழை மரங்களை அப்புறப்படுத்துவதற்கே ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகும். இதனால், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ளதை அரசு கவனத்தில் கொண்டு, ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்கினால்தான் அடுத்து விவசாயம் செய்ய முடியும் என்றாா் மதியழகன்.

மின் கம்பங்கள் சாய்ந்தன: சூறைக்காற்று காரணமாக, திருவையாறு அருகே சாத்தனூா் - மகாராஜபுரம் முதன்மைச் சாலையில் மின்மாற்றி, மின் கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்து விழுந்தன. மின் கம்பிகள் அறுந்துவிட்டதால் அப்பகுதியில் சுமாா் 4 மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

திருவையாறு அருகே வடுகக்குடியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.

திருவையாறு அருகே வடுகக்குடியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.