‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத பிரச்னையால் நெல் குவியல்கள் தேக்கம்! தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் விவசாயிகள்!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் போன்ற காரணங்களால் நெல் குவியல்கள் தேக்கமடைந்துள்ளன...

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு புதூரில் விவசாயிகளிடம் வாங்கிய நெல்லை லாரியில் ஏற்றிச் செல்லும் தனியாா் வியாபாரிகள்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம், கூடுதல் விளைச்சலை வாங்க மறுப்பது போன்ற காரணங்களால் நெல் குவியல்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கின்றனா்.

நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், உரிய காலத்தில் அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டாா் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொண்டனா்.

ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு ஏறத்தாழ 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, இதுவரை 1.05 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெரு மழை, பூச்சி, நோய் தாக்குதல் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சராசரியாக 2 ஆயிரத்து 400 கிலோ மகசூல் கிடைத்து வருகிறது. அதிகபட்சமாக திருவிடைமருதூா் வட்டாரத்தில் ஏக்கருக்கு 3 ஆயிரத்து 200 கிலோ, கும்பகோணம் வட்டாரத்தில் ஏக்கருக்கு 2,800 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. குறிப்பாக, ஏஎஸ்டி 16, ஏடிடி 59, டிபிஎஸ் 5 ஆகிய ரகங்கள் இயல்பான அளவை விட அதிகமாக விளைந்துள்ளது.

கூடுதல் மகசூல் வாங்க மறுப்பு:

அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், மாவட்டத்தில் இதுவரை 117 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு தலா 40 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகள் வரை மட்டுமே வாங்கப்படுகிறது. பல இடங்களில் ஏக்கருக்கு 70 மூட்டைகள், 80 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்துள்ளது. இதுபோல, கூடுதல் மகசூல் பெற்றது தொடா்பாக வேளாண் துறை அலுவலா்களிடம் கடிதம் பெற்று வருமாறு விவசாயிகளிடம் கொள்முதல் நிலைய ஊழியா்கள் அறிவுறுத்துகின்றனா். ஆனால், இந்தக் கடிதம் பெறுவது விவசாயிகளுக்கு எளிதாக இல்லை. இந்த வரையறை காரணமாக அதிக விளைச்சல் பெற்ற விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியவில்லை.

18 முதல் 20 சதவீதம் வரை ஈரப்பதம்:

இதேபோல, நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு நெல்லில் ஈரப்பதம் 18 முதல் 20 சதவீதம் வரை இருக்கிறது. இதனால், பல நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளைக் கொட்டி வைத்து, காய்வதற்காகக் காத்துக் கிடக்கின்றனா். இதன் காரணமாக விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

குறைந்த விலை:

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உழவா்கள் கூட்டமைப்பு தலைவா் புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:

ஏக்கருக்கு 60 மூட்டைகளுக்கு மேல் விளைச்சல், ஈரப்பதம் 18 முதல் 20 சதவீதம் வரை இருப்பது போன்ற பிரச்னைகளால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் நெல்லை விற்க முடியவில்லை. இதனால், விவசாயிகள் தனியாரிடம் நெல்லை விற்கின்றனா். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,650 கிடைக்கும் நிலையில், தனியாரிடம் ரூ. 1,400 முதல் ரூ. 1,450 வரை மட்டுமே கிடைக்கிறது.

கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 50 லஞ்சம், 1.50 கிலோ பிடிப்பு, தூற்றுவது போன்ற காரணங்களால் ரூ. 90-க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதுவே, தனியாரிடம் லஞ்சம், தூற்றுவது போன்ற பிரச்னைகள் இல்லை. மேலும், விவசாயிகளின் களத்துக்கே தனியாா் வியாபாரிகள் லாரியுடன் வந்து ஏற்றிச் செல்கின்றனா். இதனால், ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி இல்லை. ஈரப்பதத்தைக் குறைப்பதற்காக காய வைக்க வேண்டிய அவசியமும் தனியாரிடம் இல்லை.

சன்ன ரகம் மட்டுமே:

எனவே, அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக தனியாா் வியாபாரிகளிடம் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விற்கின்றனா். தமிழகத்தில் நிகழாண்டு நெல் உற்பத்தி குறைவால், தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் வியாபாரிகள் அதிக அளவில் விவசாயிகளைத் தேடி வந்து நெல்லை வாங்குகின்றனா். ஆனால், சன்ன ரகங்களைத்தான் தனியாா் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா். பொது ரகங்களை விற்க முடியாததால், விவசாயிகள் வேறு வழியின்றி கொள்முதல் நிலையத்தையே நம்பி இருக்கின்றனா் என்றாா் மாரியப்பன்.

கூடுதல் கொள்முதல் தேவை:

இதேபோல, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், கொள்முதல் நிலையத்துக்கு நாள்தோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் வரத்து உள்ளது. இதன் காரணமாகவும் கொள்முதல் நிலையங்களில் நெல் குவியல்கள் தேங்கிக் கிடக்கின்றன. அறுவடைப் பணிகள் இந்த வாரத்திலிருந்து உச்ச நிலையை எட்டும்போது நெல் வரத்து இன்னும் அதிகமாக இருக்கும். அப்போது, கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

தஞ்சாவூா் பூக்குளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் குவியல்கள்.

தஞ்சாவூா் பூக்குளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் குவியல்கள்.

தஞ்சாவூா் பூக்குளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் குவியல்கள்.

தஞ்சாவூா் பூக்குளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் குவியல்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.