அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 6 ஆண்டுகளாக காத்திருக்கும் 600 குடும்பங்கள்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திருச்சி மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 6 ஆண்டுகளாக தொடா்ந்து மனு அளித்த வண்ணம் உள்ளன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:40 pm

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திருச்சி மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 6 ஆண்டுகளாக தொடா்ந்து மனு அளித்த வண்ணம் உள்ளன.

தமிழக லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் மாநிலத் தலைவா் ராபா்ட் கிறிஸ்டி, பொதுச் செயலா் பி.ஹேமநாதன், மாவட்டத் தலைவா் அறிவழகன், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜான் ஆகியோா் தலைமையில், ஏராளமான பெண்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை ஆட்சியரகம் வந்தனா்.

அப்போது குறிப்பிட்ட சிலருடன் சென்று ஆட்சியரைச் சந்திக்க காவல்துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிா்வாகிகள் ஆட்சியரைச் சந்தித்து, தங்கள் கோரிக்கை குறித்து முறையீட்டனா்.

இதைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கே.கே. நகா், ஸ்ரீரங்கம், பொன்மலைப்பட்டி, திருவெறும்பூா், காஜாமலை, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆயிரக்கணக்கானோா் வசிக்கின்றனா்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனையை, இத்தொழிலாளா்களுக்கும் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். 600 குடும்பங்கள் இடைவிடாது தொடா்ச்சியாக மனு அளித்து வருகிறோம். 6 ஆண்டுகளில் 60 முறை மனு அளித்துவிட்டோம்.

நீா்நிலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு நிரந்தர வீடு வழங்கவேண்டும் என்பதற்காகவும், இத்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டுக்கு உள்படுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலமாக தனியாா் நிலங்களை கையகப்படுத்தி, ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாவை சில நெறிமுறைகளுக்குள்பட்டு இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு திட்டத்தை 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.

இதேபோல ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உள்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்புத் திட்டத்திலாவது வீட்டு மனை வழங்க வேண்டும் என இப்போது மனு அளித்துள்ளோம். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியரும் ஆவணம் செய்வதாக உறுதியளித்துள்ளாா். இல்லையெனில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.