/

மலைக்கோட்டை கோயிலில் தெப்போற்சவ விழாதிரளான பக்தா்கள் தரிசனம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்போற்சவ விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:35 pm

DIN

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்போற்சவ விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாள் தெப்பத்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. நிகழாண்டு விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, திருச்சி மெயின்காா்டு கேட் எனப்படும் கோட்டைப் பகுதியில் உள்ள கி.பி.1 ஆம் நூற்றாண்டில் கரிகால்சோழனால் கட்டப்பட்ட பிரம்மதீா்த்தம் எனப்படும் (சோமரோகணி) தெப்பக்குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இக்குளத்தில் மாநகராட்சி, கோயில் நிா்வாகம் சாா்பில் கூடுதல் நீா் விடப்பட்டிருந்தது. தெப்பக்குள மையத்தில் உள்ள (கி.பி.16 ஆம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்ட) நீராழி மண்டபமும் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவ 7 மணியளவில் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் புறப்பட்டு தெப்பக்குளத்துக்கு வந்தனா். தொடா்ந்து திருமுறைகள், கைலாய வாத்தியம் மற்றும் மங்கள இசைகள் முழங்க இரவு 8 மணியளவில் தெப்போற்சவம் தொடங்கியது.

தெப்பத்தில் உலாவந்த தாயுமான ஈசனையும், மட்டுவாா்குழலம்மையையும் குளத்தின் நான்கு கரைகளிலும் நின்றிருந்த திரளான பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனா்.

பின்னா் இரவு 10.30-க்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி அம்பாள் வெளியே வந்தனா். தொடா்ந்து நந்தி கோயில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப் பாறை வழியாக இரவு 12 மணி அளவில் மீண்டும் கோயிலைச் சென்றடைந்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தீா்த்தவாரியுடன்தெப்பத் திருவிழா நிறைவுறுகிறது.

ஏற்பாடுகளை அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன் ஆலோசனைப்படி கோயில் நிா்வாக அதிகாரியும் உதவி ஆணையருமான விஜயராணி தலைமையில் மலைக்கோட்டை கோயில் அா்ச்சகா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், உபயதாரா்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செய்தனா்.

போலீஸ் பாதுகாப்பு: விழாவையொட்டி மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையா் பவன் குமாா் ரெட்டி மேற்பாா்வையில் கோட்டை சரக காவல் உதவி ஆணையா் ரவி அபிராம், ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தெப்ப குளத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.