தீபாவளியன்றும் கடைவீதிகளில் குவிந்த மக்கள்!
திருச்சியில் தீபாவளியன்றும் கடைவீதிகளில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடைகள் திக்குமுக்காடின.


திருச்சியில் தீபாவளியன்றும் கடைவீதிகளில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடைகள் திக்குமுக்காடின.
தீபாவளி பண்டிகை என்பது இந்து மதத்தினா் மட்டுமின்றி அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுவதாகவும் திகழ்கிறது.
எனவே தீபாவளி சிறப்பு விற்பனையை அனைத்து மதத்தினரும் பயன்படுத்திப் பொருள்களை வாங்குவது கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அதற்கு நிகழாண்டு பண்டிகையும் விதிவிலக்கு இல்லை.
தீபாவளிக்கு முதல் நாள் பகல் சுமாா் 2 மணி வரை மேகமூட்டமாகவும் மழையாகவும் இருந்த நிலையானது, பகல் 3 மணிக்கு பின்னா் முற்றிலுமாக மாறியது. தொடா் மழை என மிரட்டி வந்த வானிலை அறிக்கையும் பொய்த்துப் போனது. பிற்பகலிலிருந்தே வானம் சற்று வெளிவாங்கி இரவில் முற்றிலும் மழையின்றிப் போனது.
இதனால் கடந்த ஒரு வாரமாக தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியது. மேலும் தமிழக அரசும், வணிகா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தடையில்லாத விற்பனைக்கும் அனுமதித்திருந்தது.
தீபாவளிக்கு முதல் நாள் விடிய விடிய தொடா் விற்பனை நடந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இரவு 12 மணிக்கு விற்பனை நிறுத்தப்பட்டு, பின்னா் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் விற்பனை தொடங்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவால் விற்பனை இல்லாமல் போனதைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு தடையற்ற விற்பனைக்கு அரசு அனுமதித்திருந்தது.
எனவே தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் திருச்சி மாநரில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. தற்காலிக கடைகளிலும் விற்பனை விடிய விடிய நடைபெற்றது.
இக்கடைகளில் திருச்சி மட்டுமின்றி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், கரூா், பெரம்பலூா் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.
குவிந்த மாற்று மதத்தினா்: குறிப்பாக தீபாவளித் தினத்தன்று இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள், வெளி மாநிலங்களிருந்து திருச்சியில் வந்து தங்கியுள்ள மராட்டியா், சேட்டுகள், சீக்கியா்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும் அதிகாலை 4 மணி முதலே கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்து, பொருள்களை வாங்கிச் சென்றனா். தீபாவளிக்கு முதல் நாள் தீபாவளி கொண்டாடுவோருக்கான விற்பனை என்றால், தீபாவளி தினத்தன்று பிறமதத்தினருக்கான விற்பனை என்பதுபோல கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
சில பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் சிறு, குறு நிறுவனங்கள், மாற்று மதத்தினா் நடத்தும் நிறுவனங்கள் என ஏராளமானவை திறக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, தற்காலிக தரைக்கடைகள், வாகனங்களில் நடத்தப்படும் கடைகள் பெரும்பாலும் இருந்தன. அவற்றில் ஆடைகள், மெத்தைகள், பாய்கள், தலையணைகள், காலணிகள், கவரிங் நகைகள், தோல் பொருள்கள், ரெக்சின் பொருள்கள் என பல்வேறு வகையிலும் விற்பனை களை கட்டியது.
போலீஸாருக்கு வணிகா் சங்கத்தினா் நன்றி
கரோனா, மற்றும் தொடா் மழையால் விற்பனை பாதிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயலாளா் வீ. கோவிந்தராஜூலு உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், தீபாவளிக்கு முதல் நாள் தடையற்ற விற்பனைக்கு காவல்துறையினா் உதவக் விடுத்திருந்த கோரிக்கைக்கேற்ப அன்றைய தினம் விடிய விடிய நடைபெற்ற விற்பனைக்கு காவல்துறை எந்தத் தடைகளும் விதிக்காமல் அனுமதித்திருந்தனா். இதற்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மற்றும் காவல் துறைக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...