நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவிரியில் கரைபுரண்ட ஆடிப்பெருக்கு: திருச்சியில் 63 இடங்களில் அனுமதி!

திருச்சியில் அம்மா மண்டபம் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா புதன்கிழமை களைகட்டியது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 4:56 am

DIN

திருச்சி: திருச்சியில் அம்மா மண்டபம் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா புதன்கிழமை களைகட்டியது.  இதில், புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள்  ஏராளமானோர் காவிரிக் கரைகளில் குவிந்து வழிபட்டனர்.

Story image

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. 

Story image

அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  அதிகளவில்  தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக குவிந்த புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள், காவிரியில் உற்சாகமாக நீராடினர்.

Story image

பின்னர் அவர்கள் படித்துறையிலும், ஆற்றின் மணற் பரப்பிலும் வாழை இலை விரித்து, அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருக மணி, வளையல்கள், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர், அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் ஓரமாக ஓடிய மற்றும் தேங்கியிருந்த தண்ணீரில் மிதக்க விட்டனர். காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

Story image

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய ஒரு குடும்பத்தினர் காவிரி அன்னைக்கும், சூரிய பகவானுக்கும் தீபாராதனை காண்பித்தனர்.

Story image

புதுமண தம்பதிகள் தாங்கள் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்து விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர். அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். 

Story image

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆறு படித்துறைகளில் கூட்டம் அலை மோதியது. வழிபாடு முடிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா மற்றும்  கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம் மன்படித் துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி, முக்கொம்பு, கொள்ளிடம் என திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடப் பகுதியில் 63 இடங்களில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் குளித்து ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.