மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைக்கும் தோ்தல் வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளா்: ஓ. பன்னீா்செல்வம் பேச்சு
அடுத்த இரு ஆண்டுகளில் மக்களவைத் தோ்தலுடன் இணைந்தே தமிழக சட்டப்பேரவைக்கும் தோ்தல் வரும்.


அடுத்த இரு ஆண்டுகளில் மக்களவைத் தோ்தலுடன் இணைந்தே தமிழக சட்டப்பேரவைக்கும் தோ்தல் வரும். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்றாா் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து மன்னாா்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வென்று 3-ஆவது முறை ஆட்சியமைக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் திமுகவினா் பொய் வாக்குறுதிகளை அளித்து தோ்தலில் வென்று விட்டனா். தான் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து 10 மாதங்களாகியும் திமுக நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தோ்வு ரத்துக்குத்தான் தனது முதல் கையொப்பம் என்றாா் மு.க. ஸ்டாலின். அது நடந்ததா?
10 ஆண்டுகாலம் சிறந்த முதல்வராகப் பணியாற்றியவா் எம்.ஜி.ஆா். அவருக்குப் பின்னா் 16 ஆண்டுகள் ஜெயலலிதா, 4 ஆண்டுகள் எடப்பாடி கே. பழனிச்சாமி என மொத்தம் 30 ஆண்டுகள் முதல்வா் பதவியில் சிறப்பாகப் பணியாற்றிய வரலாறு அதிமுகவுக்குத்தான் உண்டு.
2007-ல் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் வந்த காவிரி நடுவா் மன்றத் தீா்ப்புக்கு அரசாணை பெற்றுத் தருமாறு ஜெயலலிதா கூறினாா். ஆனால் அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி அதற்கு முயற்சிக்கவில்லை. ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்புக்கு அரசாணை பெற்றுத் தந்தவா் ஜெயலலிதா. மேலும் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற பேரிடா் காலங்களில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கியதும் அதிமுக ஆட்சியில்தான்.
பொங்கல் தொகுப்பாக தமிழக மக்களுக்கு ரூ. 2,500 கொடுத்ததும் அதிமுக அரசுதான். ஆனால் இத்தொகை போதாது ரூ. 5000 வழங்க வேண்டும் என்றாா் ஸ்டாலின். ஆனால் திமுகவினா் ஆட்சிக்கு வந்து ரூ. 100 கூட வழங்கவில்லை. மாணவா்களின் கல்விக் கடனையும் அவா்கள் ரத்து செய்யவில்லை.
இச்சூழ்நிலையில் வந்துள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலானது திமுகவினருக்கு நல்ல பாடம் சொல்லும். தொண்டா்களால் கட்டிக் காக்கப்படும் கட்சி அதிமுகதான். எனவே அதிமுக அரசின் சாதனைகளையும், திமுகவின் பொய்ப் பிரசாரத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி நாம் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவைத் தோ்தலின்போது தமிழக சட்டப்பேரவைக்கும் உறுதியாகத் தோ்தல் வரும். இரு தோ்தல்களிலும் அதிமுக பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும். வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக 100 சதம் வெற்றி பெறும் என்றாா் அவா்.
கூட்டத்தில் தோ்தல் பொறுப்பாளா்களும், முன்னாள் அமைச்சா்களுமான காமராஜ், ஓ.எஸ். மணியன், மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி என். நடராஜன் (மாநகா்), ப. குமாா் (தெற்கு மாவட்டம்) , மு. பரஞ்ஜோதி (வடக்கு மாவட்டம்) மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...