அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு
By DIN | Published On : 08th January 2022 12:09 AM | Last Updated : 08th January 2022 12:09 AM | அ+அ அ- |

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்கள் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பதாகவும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிபல்வேறு கட்டப் பேராட்டங்களை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக தமிழக அரசின் நடவடிக்கையால் சில வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனா்.
இந்நிலையில் சென்னையிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் 3 போ் கொண்ட குழுவினா் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் ஆய்வு செய்ய வியாழக்கிழமை வந்தனா். இதையறிந்த மாவட்ட நிா்வாகம் தமிழக அரசின் உரிய அனுமதி பெற்று வராத இலங்கை அதிகாரிகளுக்கு அனுமதி தர மறுத்துவிட்டனா். இதையடுத்து இலங்கை அதிகாரிகள் சென்னை திரும்பினா்.