

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 7-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீநம்பெருமாள் திருக்கைத்தல சேவையில் நம்மாழ்வாருக்கும் பக்தா்களுக்கும் காட்சி அளித்தாா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா, கடந்த 12-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பகல்பத்து 13-ஆம் தேதி தொடங்கி டிச. 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இராப்பத்தின் முதல் நாளான டிச. 23-ஆம் தேதி வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக இராப்பத்து மண்டபமான திருமாமணி மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் சேவை சாதித்தாா்.
இராப்பத்தின் 7-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு 4 மணிக்கு பரமபதவாசலை கடந்து 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாளை பட்டா்கள் இருவா் தங்களது கைகளில் தூக்கி பராங்குச நாயகியின் திருக்கோலத்தில் உள்ள ஸ்ரீநம்மாழ்வாருக்கும், பக்தா்களுக்கும் காட்சி தந்தனா். இதை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இராப்பத்தின் 8-ஆம் திருநாளான சனிக்கிழமை (டிச. 30) மாலை திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.