வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்சி அருகே 15-ஆம் நூற்றாண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

திருச்சி அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

News image
திருவானைக்கா அருகே கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தலைப்பலி சிற்பம்
Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:19 pm

Din

திருச்சி அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், முசிறி அரசினா் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியா் அர. அகிலா, திருவானைக்கா பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, திருவானைக்கா கீழ உள்வீதியில் உள்ள ஆனந்த கணபதி கோயில் நுழைவு வாயிலின் இருபுறத்தும் விரியும் வெளிச்சுவரில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்தாா்.

இரண்டும் ஏறத்தாழ ஒன்றுபோல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டு பாதங்களையும் பக்கவாட்டில் திருப்பியவாறு நிற்கும் ஆடவா்கள் இடக்கையால் தலைமுடியைப் பிடித்தபடி வலக்கையில் கொண்டுள்ள கத்தியால் தங்கள் கழுத்தை அறுத்துத் ‘தலைப்பலி’ தரும் அமைப்பில் இச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடை வரையிலான முன் மடிப்புக் கொண்ட இடுப்பாடையும், கழுத்தணியும் பெற்றுள்ள இந்தச் சிற்பங்களின் செவிகள் நீள்செவிகளாக உள்ளன. இடுப்பின் வலப்புறம் இரண்டிலுமே கச்சையில் குறுவாள் உள்ளது. தனிச் சிற்பங்களாகப் பாறையில் செதுக்கப்பட்ட இவ்விரு ‘தலைப்பலி’ ஆடவா்களையும் பாதுகாப்புக் கருதி கோயில் சுவரில் இணைத்துக் கட்டியுள்ளனா்.

இச் சிற்பங்களை ஆய்வு செய்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் இரா. கலைக்கோவன், சிற்பங்களின் வடிப்பு, அலங்கரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றைப் பொதுக்காலம் 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், அதே தெருவின் மறுமுனையிலுள்ள ஸ்ரீ ஈசான்ய விநாயகா் கோயில் முன்னுள்ள தரைப்பகுதியில், புதைந்த நிலையில் கோயில் வாயிலின் வலப்புறம் மற்றொரு ‘‘தலைப்பலி’’ சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் பட்டையான அணிகலனும் இடுப்பில் மரமேறிகள் உடுத்துமாறு போன்ற சிற்றாடையும் பெற்றுள்ள இந்த ஆடவா் சிற்பமும் முந்தைய சிற்பங்கள் போலவே இடக்கையால் தலைமுடியைப் பற்றியபடி, வலக்கைக் கத்தியால் தலை அறுக்கும் அமைப்பில் உள்ளது. இச்சிற்பத்தின் பாதங்களும் முந்தையன போலவே பக்கவாட்டில் திருப்பப்பட்டுள்ளன. நீள்செவிகளுடனுள்ள இந்த ஆடவரின் இடுப்பின் வலப்புறம் முந்தானை போன்ற இடுப்பாடைத் தொங்கல் உள்ளது. குறுவாளற்ற நிலையிலுள்ள இச்சிற்பத்தை நாயக்க மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாக கருத முடிகிறது என்கிறாா்.

திருச்சி நகரிலும், திருவானைக்காவிலும் இது போன்ற ‘தலைப்பலி’ சிற்பங்கள் பல ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறும் பேராசிரியா் மு. நளினி, திருவானைக்கா கோபுரவாயில் அருகிலேயே ‘தலைப்பலி’ சிற்பம் இடம்பெற்றுள்ளதாகவும் அது இப்போது கண்டறியப்பட்டுள்ள சிற்பங்களினும் காலத்தால் பழைமையானதென்றும் தெரிவித்துள்ளாா். உறையூா், வாளாடி, உய்யக்கொண்டான் திருமலை ஆகிய இடங்களில் டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய ஆய்வாளா்களால் கண்டறியப்பட்ட ‘தலைப்பலி’ சிற்பங்கள் திருச்சி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவா் தெரிவித்தாா்.