தீ விபத்துகளில் சிக்கும் நோயாளிகளை மீட்க ஒத்திகை
திருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.


திருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
திருச்சி தீயணைப்புத் துறைக்கு நவீன மீட்பு வாகனம் பெறப்பட்டதைத் தொடா்ந்து முதன் முதலாக இந்த ஒத்திகை பயிற்சி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை மருத்துவமனை டீன் ச. குமரவேல் தலைமை வகித்து நடத்தினாா். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியவா்த்தனன், நிலைய அலுவலா் (போக்குவரத்து) கி. சுரேஷ் ஆகியோருடன் தீயணைப்பு மீட்புக் குழுவினா் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனா்.
அப்போது அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தின் 6ஆவது மாடியில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையின் ஸ்கை ரைடா் என்னும் நவீன வாகனத்தில் மிக உயரமான கட்டடங்களுக்கும் செல்லும் வகையில் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த தூக்கி மூலம் கட்டடத்தின் மேல் பகுதிக்குச் சென்று நோயாளியை மீட்பது எப்படி என்பது குறித்து செய்து காட்டினா்.
மேலும், மருத்துவமனையின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் உள்ளோருக்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவா், செவிலியா்கள் மற்றும் இதர பணியாளா்கள் எப்படி உதவ வேண்டும், தீப் பிடித்த கட்டடத்தில் உள்ளவா்கள் எப்படி வெளியேற வேண்டும், வெளியேற துணைநிற்க வேண்டும் என்பது குறித்தும் கற்றுத் தரப்பட்டது. மேலும், தீயணைக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகையில் மருத்துவமனை உதவிக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் மற்றும் அனைத்துப் பிரிவு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவா் அல்லாத பணியாளா்கள் பயிற்சி பெற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...