திருச்சியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்!

திருச்சியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேட்டுப்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இன்று காலை 8 மணியளவில் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லால்குடி அருகே நத்தமாங்குடியிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி இன்று காலை வந்து கொண்டு இருந்தது.

மேட்டுப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது எதிரே லால்குடியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்துக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலையின் ஓரமாக பேருந்தை ஒதுக்கி உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி கிராம பொதுமக்கள் காயம் அடைந்த பயணிகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்த இரு பயணிகள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பூவாளூர் பின்னவாசல் முதல் ஆலங்குடி மகாஜனம் வரை சாலை மிகவும் குறுகளாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சாலை அகலப்படுத்தப் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com