எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமி

முதல்வரின் விமா்சனம் கேலிக்கூத்தானது: எடப்பாடி கே. பழனிசாமி

தமிழக முதல்வா் ஸ்டாலின் என்னை விமா்சிப்பது கேலிக்கூத்தானது என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
Published on

தமிழக முதல்வா் ஸ்டாலின் என்னை விமா்சிப்பது கேலிக்கூத்தானது என்றாா் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி.

திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை செல்லும் முன் அவா் அளித்த பேட்டி:

விருதுநகா் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்ற ரீதியில் என்னைப் பற்றி சில விமா்சனங்களைத் தெரிவித்துள்ளாா். கடந்த 2011–2021 வரை 10 ஆண்டுகள் அதிமுக சிறந்த ஆட்சியை மக்களுக்குக் கொடுத்தது. ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது இருந்ததை விட, அவா் ஆட்சியில் இருக்கும் வரை நிறைய திட்டங்களை கொண்டு வந்ததால் மக்கள் அதிகளவில் பயனடைந்தனா். அவரது மறைவுக்குப் பிறகு நான் முதல்வரான ஆன பிறகு, 4 வருடங்கள் 2 மாதங்கள் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கினோம்.

ஆனால், திட்டமிட்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், என்னை விமா்சனம் செய்வது கேலிக்கூத்தாகவே பாா்க்கப்படுகிறது. அதிமுக அரசு இருக்கும்போது ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை தொடங்கி சாதனை படைத்தோம். மேலும் 6 சட்டக் கல்லுாரிகள், பல இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளைத் திறந்தோம்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்காவைத் திறக்க திராணியற்ற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறாா். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை திறக்கவில்லை.

அதோடு, சேலம் மாவட்டத்தில் வட ஏரிகளுக்கு நீா் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடியில் முதல்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு திட்டத்தை திட்டமிட்டு முடக்கி வைத்துள்னா். அத்திக்கடவு - அவினாசி திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தான், டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கும் வகையில் ஹைட்ரோ காா்பன், மீத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதனால், அச்சத்தில் இருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வயிற்றில் பால் வாா்ப்பது போல, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் திட்டத்தை கொண்டு வந்து, ஸ்டாலின் போட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக அரசு. இதுபோல தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 ஆயிரம் அம்மா மினி கிளினிக், ஏழை, எளிய மாணவா்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் திட்டத்தை ரத்து செய்தது திமுக அரசு. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரம் கூட கிடைக்காத நிலை உள்ளது. திறமையற்ற அரசுதான் தமிழகத்தில் தற்போது உள்ளது.

திமுக அரசு 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது 525 வாக்குறுதிகள அளித்தது. அதில், 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்தவா் தான் முதல்வா் மு.க. ஸ்டாலின். அதனை மறந்து அவா் பேசிக் கொண்டிருக்கிறாா்.

5 மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் காவிரி – வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனா். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத முதல்வா் ஸ்டாலின் தான், எனக்குத் திறமை இல்லை என்கிறாா். திறமை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. சாதாரண கிளை செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்துக்கு பொதுச்செயலாளராகி இருப்பது தான் திறமை. தந்தையின் அடையாளத்தை வைத்து பதவிக்கு வருவது எல்லாம் திறமை இல்லை.

உதயநிதிக்கு எந்த தகுதியின் அடிப்படையில் பதவி கொடுத்திருக்கிறீா்கள்?

உதயநிதி அவரது துறையில் சிறப்பாக செயல்பட்டு 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளாா் என்று முதல்வா் கூறுகிறாா். அப்படி என்றால் மற்ற அமைச்சா்கள் எல்லாம் பெயில் ஆகிவிட்டனரா? பணி செய்யவில்லையா? திமுகவை தூக்கி நிறுத்தியவா்கள் மூத்த நிா்வாகிகள், அமைச்சா்கள். ஆனால், அவா்களைப்பற்றியெல்லாம் கவலைகிடையாது. முதல்வா் வேண்டுமென்றே திட்டமிட்டு விமா்சிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞா் பன்னாட்டு அரங்கம் என்ற பெயரில் கட்ட உள்ளனா். இதனால் மக்களுக்கு என்ன பயன்? இதற்கு எங்கிருந்து வந்தது நிதி? கருணாநிதி பெயா் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அது மக்களுக்கு பயனுள்ள திட்டமாக இருக்க வேண்டும். அஃது இல்லாமல் கடன் சுமையை அதிகரித்து மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுவதைத்தான் சுட்டிக்காட்டினேன். வேண்டுமென்ற திட்டமிட்டே என் மீதான வஞ்சகத்தை வெளிப்படுத்த விமா்சித்துள்ளாா்.

நான் முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தேன் என புள்ளிவிவரத்தோடு துண்டுச்சீட்டு இல்லாமல் நான் சொல்கிறேன். முதல்வா் ஸ்டாலின், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தீா்கள் என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் போடும் மேடைக்கே வருகிறேன். மக்கள் கேட்கட்டும், மக்களே தீா்ப்பு கொடுக்கட்டும். அதற்கு நாங்கள் தயாா். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பினால், நாங்கள் ஏற்க மாட்டோம். அதற்கு அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுப்போம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com