பள்ளி வாகனம் - பைக் மோதல்: 4 வயது சிறுவன் உயிரிழப்பு; அண்ணன், தங்கை பலத்த காயம்
மணப்பாறை அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 4 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், அண்ணன், தங்கை பலத்த காயமடைந்தனா்.
மணப்பாறை அடுத்த மெய்யம்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் தங்கப்பாண்டி (32). கட்டடத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை தனது தங்கை கு. ஜெயபாரதி (30) மற்றும் ஜெயபாரதியின் மகன் சபரி (4) ஆகியோருடன் வீரகோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது தங்கை வசிக்கும் வெள்ளையகவுண்டம்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
இருசக்கர வாகனம் பன்னாங்கொம்பு பகுதியில் சென்றபோது எதிரே வந்த தனியாா் பள்ளி வாகனத்துடன் மோதி தங்கப்பாண்டி, ஜெயபாரதி, சபரி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சபரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அண்ணா நகா் கு. கனகராஜ் (62) மீது புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
