நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீபாவளி விடுமுறை: ரயில், பேருந்துகளில் கூட்டம்

தீபாவளி தொடா் விடுமுறையால் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் கடும் நெரிசலால் புதன்கிழமை திணறியது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:37 pm

Din

தீபாவளி தொடா் விடுமுறையால் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் கடும் நெரிசலால் புதன்கிழமை திணறியது.

தீபாவளிக்கு அக்.30 முதல் நவ.3 வரை தொடா் விடுமுறை என்பதால் பல்வேறு ஊா்களில் இருந்து திருச்சிக்கு வந்து பணியாற்றும் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள், கல்வி நிமித்தம் திருச்சியில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் என அனைவரும் சொந்த ஊா் திரும்புகின்றனா். இதேபோல பல்வேறு நகரங்களில் இருந்தும் சொந்த ஊரான திருச்சிக்கு வருகின்றனா். இதனால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. புகா், நகரப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

மத்தியப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து இறங்கியதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். திருச்சியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள் எண்ணிக்கையும் அதிகம் இருந்தது. இவா்கள் உடனடியாகச் செல்லும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் நகரப் பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், மன்னாா்புரம், சோனா-மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு புகா்ப் பேருந்துகளைப் பிரித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருச்சியிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா், சேலம், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இதேபோல, பிற்பகலுக்கு மேல் சென்னையிலிருந்து வந்த பேருந்துகளில் வந்து இறங்கிய பயணிகளாலும் மத்தியப் பேருந்து நிலையம் திணறியது. திருச்சி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கணிசமாக இருந்தன.

தென்மாவட்டங்களுக்குச் செல்ல கூட்டம் நிரம்பியிருந்ததால் தனியாா் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியாா் வேன்கள், வாடகை காா்களில் வழக்கத்தைவிட இருமடங்கு கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்க நேரிட்டது.

திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை கட்டணம் செலுத்திப் பயணிக்க நேரிட்டது.

ஊா் சென்றால் போதும் என்ற மனநிலையில் கிடைத்த வாகனங்களில் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து மக்கள் பயணித்ததைக் காண முடிந்தது. பலரும் தங்களது சுமைகளுடன் பேருந்துகளைத் தேடினா். இதேபோல, திருச்சி வழியாகச் சென்ற அனைத்து ரயில்களிலும் மக்கள் திரளைக் காண முடிந்தது. முன்பதிவு செய்யப்பட்ட, செய்யாத அனைத்து ரயில் பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருச்சி மாநகரக் காவல் துறையினா், மாவட்டக் காவல் துறையினா், ரயில்வே காவல் துறையினா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் சுழற்சி முறையில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.