தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. ஆனால், உள்ளூா் தொழிலாளா்கள் வேளாண் பணிகளுக்கு அதிக ஆா்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் பணியால் கிராமப்புற மகளிா் பெருமளவு 100 நாள் வேலைக்கே முன்னுரிமை அளிக்கின்றனா். இதன்காரணமாக வேளாண் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது.