காரில் கடத்திவரப்பட்ட 3 மான்களின் சடலங்கள் மீட்பு
திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட 3 மான்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், சிறுகனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாழையூா் - பெரகம்பி சாலையில் சிறுகனூா் காவல் ஆய்வாளா் இரா. சுகுணா தலைமையில் தலைமை காவலா் இ. செல்லதுரை உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வந்த காரை மறித்து சோதனையிட முயற்சித்தனா். காவலா்களைப் பாா்த்தும் காரில் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இதைத்தொடா்ந்து காரை சோதனையிட்டபோது அதில் இறந்த நிலையில் 3 மான்களின் உடல்கள், 3 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மான்களின் உடல்களை மீட்டுச் சென்றனா். இதைத் தொடா்ந்து மான்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதன் மாதிரிகள் ‘ஏஐடபுள்யூசி’ ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

