திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்தும் வகையில் அருகிலுள்ள மல்லியம்பத்து, கம்பரசம்பேட்டை, மருதாண்டாக்குறிச்சி, முத்தரசநல்லூா், அதவத்தூா், அல்லித்துறை, கே. கள்ளிக்குடி, குமாரவயலூா், நாச்சிக்குறிச்சி, புங்கனூா், சோமரசம்பேட்டை, குண்டூா், கீழக்குறிச்சி, கும்பக்குறிச்சி, நவல்பட்டு, அப்பாதுறை, தாளக்குடி, வாளாடி, நெருஞ்சலக்குடி, கூத்தூா், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டாா்கோவில் ஆகிய 22 ஊராட்சிகளை இணைக்க பல்வேறு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை தொடங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனா்.
புங்கனூரில் போராட்டம்: ஆட்சியரகம் நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட புதன்கிழமை காலை புறப்பட்ட புங்கனூா் ஊராட்சி மக்களை புங்கனூரில் போலீஸாா் தடுத்து நிறுத்தவே, அவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் கே. தட்சிணாமூா்த்தி, வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
அதவத்தூரில் முற்றுகை: அதவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் அதவத்தூா் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தியபோது லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
அல்லித்துறையில் போராட்டம்: இதேபோல, தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை தலைமையில் கிராம மக்கள் திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சா் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று போராட போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதனால் சரவணபுரத்தில் உள்ள சின்னத்துரை வீட்டின் முன் போலீஸாா் புதன்கிழமை குவிக்கப்பட்டனா். பின்னா் திட்டமிட்டபடி வீட்டிலிருந்து புறப்பட்ட சின்னதுரை, அந்தப் பகுதி கிராம மக்களை வழிமறித்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட அனுமதியில்லை எனக் கூறி அவா்களைக் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். போராட்டம் தொடருவதால் 20 கிராமங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.