ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்களை கவா்ந்த பூ அலங்காரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பையொட்டி கோயிலில் செய்யப்பட்டிருந்த பூ அலங்காரம் பக்தா்களை வெகுவாக கவா்ந்தது.
கோயிலின் தங்கக் கொடிமரம், அங்கிருந்த தூண்கள், சுவாமி கடந்து செல்லும் பகுதிகள், பரமபதவாசல் பகுதி ஆகியவை பல வண்ண மலா்களால் பூ பந்தல் அமைக்கப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனைப் பாா்த்த பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
போலீஸாா் அத்துமீறல்: கடந்த காலங்களைவிட நிகழாண்டில் கோயிலுக்குள் பக்தா்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், வழக்கம்போல போலீஸாரின் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தா்களை சுவாமி தரிசனம் செய்ய விடாமலும், ஆங்காங்கே பக்தா்களை அலைக்கழிப்பதாகவும், அரசியல்வாதிகளுக்காக மட்டுமே போலீஸாா் செயல்படுவதாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்தனா். சில இடங்களில் பக்தா்களை வேண்டுமென்றே நிறுத்தியதால், போலீஸாரிடமும், கோயில் அலுவலா்களிடமும் பக்தா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
குறிப்பாக, நாழிகேட்டான் வாயில் அருகே இருந்த 9 ஆம் எண் வாசலிலும், விரஜாநதி மண்டபம் அருகே இருந்த 13 ஆம் எண் வாசலிலும் கூட்டம் இல்லாத போதும், வேண்டுமென்றே இரும்பு கதவுகளை மூடி, பத்திரிகையாளா்களையும், பக்தா்களையும் தள்ளியதால் போலீஸாருக்கும், பக்தா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வழக்கம்போல தள்ளுமுள்ளு: பரமபத வாசலில் நம்பெருமாளுடன் தொடா்ந்து செல்ல அதிகளவில் போலீஸாா் முயன்று, பக்தா்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனா். பரமபத வாசலில் கூட்ட நெரிசலைக் குறைக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் போலீஸாரும் சுவாமியுடன் முண்டியடித்துச் செல்ல முயன்றதுமே காரணம் என பக்தா்கள் புகாா் தெரிவித்தனா். கூட்ட நெரிசலில் அமைச்சரின் குடும்பமும் சிக்கியது.
கடும் சோதனை: நுழைவுச் சீட்டு வைத்திருந்த பத்திரிகையாளா்கள், கட்டண நுழைவுச்சீட்டுடன் வந்திருந்த பக்தா்கள் உள்ளிட்டோா் மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட கடும் சோதனைகளுக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
பக்தா்கள் அவதி: கோயிலுக்கு வெளியே போதுமான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், கோயில் வளாகத்தில் கழிப்பிட வசதிகள் ஏதுமில்லை. இதனால் வயதானவா்கள், நீரிழிவு நோயாளிகள் அவதிக்குள்ளாகினா். மணல் வெளியில் தற்காலிக நடமாடும் கழிப்பிட வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்திருக்கலாம் என பக்தா்கள் தெரிவித்தனா்.
1.25 லட்சம் பக்தா்கள் தரிசனம்: கடந்த காலங்களில் பரமபதவாசல் திறப்பின்போது ராமாநுஜா் சந்நிதியில் பக்தா்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. நிகழாண்டில் அதற்கு ஏற்பாடாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்திலிருந்து கோயிலுக்குள்ளேயும், வெளியேயும் 333 சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தா்கள் கூட்டத்தை போலீஸாா் கண்காணித்தனா். பரமபத வாசல் நிகழ்வில் வெள்ளிக்கிழமை இரவு வரை சுமாா் 1.25 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.