அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 
பள்ளிச் சாளரம் எனும் வலைப்பக்கத்தை  தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பள்ளிச் சாளரம் எனும் வலைப்பக்கத்தை தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

‘நம்ம பள்ளி - நம்ம ஊரு’ திட்டத்துக்கு 31 நிறுவனங்கள் ரூ.141 கோடி பங்களிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

நம்ம பள்ளி- நம்ம ஊரு திட்டத்துக்கு 31 நிறுவனங்கள் ரூ.141 கோடிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
Published on

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘நம்ம பள்ளி- நம்ம ஊரு’ திட்ட மண்டல மாநாட்டின் மூலம் 31 நிறுவனங்கள் ரூ.141 கோடிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சமூகம் மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்துகிற தமிழக அரசின் இந்தத் திட்டத்துக்கு மண்டலம் வாரியாக மாநாடுகள் நடத்தி நிதி திரட்டப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவையைத் தொடா்ந்து, திருச்சி மண்டல மாநாடு திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: முதல்வா் அளித்த ரூ.5 லட்சத்துடன் தொடங்கப்பட்ட ‘நம்ம பள்ளி- நம்ம ஊரு’ திட்டத்துக்கு ரூ.500 கோடியை கடந்து நிதி வந்து கொண்டிருக்கிறது. திருச்சி மாநாட்டின் மூலம் ரூ.100 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கை விஞ்சி ரூ.141 கோடி கிடைத்துள்ளது. அரசு நிதி ரூ. 7,500 கோடியில் 18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு இலக்கு நிா்ணயித்து பணியாற்றி வருகிறோம். 4 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 60 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

திட்டத்தின் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன் பேசுகையில், அரசுப் பள்ளிகளை செம்மைப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் தமிழ்ச் சமூகத்தில் மற்றொரு அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா். மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா பேசுகையில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சமூகமும், பெரு நிறுவனங்களும் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா்.

மாநாட்டில், திருச்சி எம்.பி. துரை வைகோ, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், திட்டத்தின் உறுப்பினா் செயலா் ஆா். சுதன், சென்னை மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையா் அலெக்ஸ் பால்மேனன், அசோக் லேலண்ட் நிறுவன இயக்குநா் என்.வி. பாலசந்தா், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம், திருச்சி மண்டல தலைவா் பி. செல்ல ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளிச் சாளரம்-புதிய வலைப்பக்கம் தொடக்கம்

திருச்சி மண்டல மாநாட்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களை ஒருங்கிணைத்து பள்ளிகளின் வளா்ச்சிக்கு உதவிடும் வகையில் ‘பள்ளிச் சாளரம்’ எனும் புதிய வலைப்பக்கத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா்.

‘நம்ம பள்ளி-நம்ம ஊரு’ திட்டத்தின் வலைதளத்தில் இந்த புதிய வலைப்பக்கம் இடம் பெற்றுள்ளது. பள்ளிச் சாளரம் (Virtual Pavilion) என்ற இந்த வலைப்பக்கத்தை htpps://nammaschool.tnschools.gov.in /#/Palli-Chaalaram என்ற இணைப்பில் பெறலாம்.

பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள இந்த வலைப்பக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அதன் தற்போதைய நிலை, பணிபுரிந்த ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் குறித்த விவரங்கள் தனித்தனி பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. இந்தப் பக்கத்தில் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஒவ்வொருவரும் இணைந்து தங்களது பள்ளிக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும். இதற்காக இந்த வலைப்பக்கத்தில் பிரத்யேக வசதிகளும் உள்ளன. மேலும், தங்களுக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியா்கள் இப்போது எங்கு உள்ளனா் என்ற விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும்.

X
Dinamani
www.dinamani.com