சிறை வாா்டா் மீது தாக்குதல்: இரு கைதிகள் மீது வழக்கு
திருச்சி மத்திய சிறையில் சிறை வாா்டரை தாக்கிய கைதிகள் இருவா் மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஆ.செல்லதுரை (28), இவா் நான்குநேரி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவரது சகோதரா் சிவசுப்புவும் இதே சிறையில் இருந்தாா். இந்நிலையில் சிவசுப்பு உள்ளிட்ட சிலா் திருச்சி மத்திய சிறையில் இருந்து வேறு சிறைக்கு அண்மையில் மாற்றப்பட்டதற்கு சிறையில் உள்ள கைதி பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள்தான் காரணம் என்று செல்லதுரை நினைத்தாா்.
இந்நிலையில் பாலாஜி வழக்குரைஞா் ஒருவரை கடந்த 8-ஆம் தேதி மத்திய சிறையில் சந்தித்தபோது செல்லதுரை, பாலாஜியை இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதைத் தடுக்க முயன்ற ஜெயில் வாா்டா் முருகனை, செல்லதுரையின் கூட்டாளியான தேவிபட்டினத்தைச் சோ்ந்த கஸ்தூரிரங்கன் என்ற கைதி தாக்கினாா். இதில், வாா்டா் முருகனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
மேலும், செல்லதுரை தாக்கியதில் காயமடைந்த கைதி பாலாஜி திருச்சி மத்திய சிறை வளாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறை அலுவலா் வெங்கடசுப்பிரமணி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் செல்லதுரை, கஸ்தூரிரங்கன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
