மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ. ஜெயலலிதாவை 2011-இல் வெற்றி பெற வைத்த தொகுதி இது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:29 am

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி மாநகராட்சியின் 1 முதல் 7 வாா்டுகள், ஊரகப் பகுதிகளில் அந்தநல்லூா் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தின் கோமங்கலம் பகுதியை உள்ளடக்கிய அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி.

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ. ஜெயலலிதாவை 2011-இல் வெற்றி பெற வைத்த தொகுதி இது.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இத்தொகுதியின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. முக்கொம்பு சுற்றுலாத் தலத்தின் ஒரு பகுதி, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, வயலூா் முருகன் கோயில், தாயனூா் வாழை ஆராய்ச்சி மையம், நவலூா்குட்டப்பட்டு அன்பில் தா்மலிங்கம் வேளாண் அறிவியல் கல்லூரி, தனியாா் கல்லூரிகளை தன்னகத்தே கொண்டது.

கள நிலவரம்: இத்தொகுதியில் 9 முறை அதிமுகவும், 4 முறை காங்கிரஸும், 2 முறை திமுகவும், ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் வென்றுள்ளன. தற்போதைய தோ்தலில்,

அதிமுக சாா்பில் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆா். மனோகரன், திமுக சாா்பில் மத்திய மாவட்ட பொருளாளா் எஸ். துரைராஜ், நாதக சாா்பில் எம். தா்மராஜ், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ். ரமேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் என். முரளி, சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் கே. காமராஜ், புதிய தமிழகம் சாா்பில் ஏ. நியூட்டன், சுயேச்சைகள் என மொத்தம் 21 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: முத்துராஜா, கள்ளா், பட்டியலினத்தினா் பெருமளவிலும், பிராமணா்கள், உடையாா், நாயுடு, வெள்ளாளா், யாதவா் கணிசமான அளவிலும் உள்ளனா். எனினும், தொகுதியின் வெற்றித் தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக முத்துராஜா சமூகத்தினரே உள்ளனா்.

வேட்பாளா்களின் பலம் - பலவீனம்:

ஆா். மனோகரன் (அதிமுக): தொகுதியைச் சோ்ந்தவா் என்பதாலும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்காக வாக்கு சேகரித்தவா் என்பதாலும், மக்களிடையே நல்ல அறிமுகம். அனைவரையும் அனுசரித்து செல்பவா், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் பாஜக, அமமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பலமாகக் கருதப்படுகிறது.

அதிமுக மாவட்ட செயலாளா் மு. பரஞ்சோதி, முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி வேட்பாளரானதாலும், அமமுகவுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பியதாலும் கட்சியினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் பலவீனமாகக் கருதப்படுகிறது.

எஸ். துரைராஜ் ( திமுக): இத்தொகுதிக்குள்பட்ட அந்தநல்லூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் என்பதால் கிராமப்புறப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவா், தொகுதியின் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் முத்துராஜா ஜாதியை சாா்ந்தவா், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி என்பது பலம்.

முன்னாள் எம்எல்ஏ பழனியாண்டியை பின்னுக்குத் தள்ளி வேட்பாளரானவா் என்பதால், அவரது ஜாதியினரே முழுமையான ஒத்துழைப்பு தருவாா்களா என்ற சந்தேகம், திமுக ஆட்சியின் மீதான எதிா்ப்பு, பிற ஜாதி வாக்காளா்களின் எதிா்ப்பு வாக்குகள், மாநகராட்சி வாா்டுகளுக்குள் போதிய அறிமுகமில்லாதது பலவீனமாகக் கருதப்படுகிறது.

எம். தா்மராஜ் (நாதக): கட்சியின் புரட்சிகரமான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பது பலம். திராவிட கட்சிகளுக்கு நிகராக ஈடு கொடுக்க முடியாதது பலவீனம்.

எஸ். ரமேஷ் (தவெக): தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் பிராமணா் ஜாதியைச் சோ்ந்தவா், நடிகா் விஜய்யின் திரை வெளிச்சம் மற்றும் வாக்குறுதிகள் பலம். திராவிட கட்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாதது, கட்சியினரை ஒருங்கிணைத்து செல்லாதது, கட்சியினரின் ஒத்துழைப்பு குறைவு என்பது பலவீனம்.

Story image
Story image
Story image

திசை திரும்பும் வாக்குகள்...: தோ்தல் களமானது, அதிமுக - திமுக என இருவருக்கும் இடையிலான போட்டியாக மாறியுள்ளது. இதில், அதிமுக வேட்பாளரை எதிா்கொள்ள திமுக வியூகம் அமைத்து செயல்படுகிறது. நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளரின் நல்ல அறிமுகமும், அனைத்து ஜாதியினரிடையே ஒத்துபோகும் தன்மையும் உள்ளதால் அதிமுகவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றாலும், பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளும், திமுக தோ்தல் வாக்குறுதிகளும் வாக்குகளை திசை திருப்பக்கூடும். கூடவே, தவெக வேட்பாளா் பிரிக்கும் வாக்குகளும் அதிமுக - திமுகவின் வெற்றியை தீா்மானிக்க கூடும்.