தவெக தோ்தல் வாக்குறுதியின் படி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜா் சிலை முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவா்கள் பி.ஆா்.பாண்டியன், அய்யாக்கண்ணு, சண்முகசுந்தரம், ராஜா சிதம்பரம், செல்வகுமாா் மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினா்.
இதில், தவெக தோ்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்துப் பயிா்க் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா பகுதியில் நீா்வரத்து இன்றி விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா், பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
தவெக தோ்தல் வாக்குறுதி படி நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்கவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 40 டி.எம்.சி நிலுவை நீரை கா்நாடகம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உபரி நீரை திறந்துவிட்டு கணக்குக் காட்டுவதை ஏற்க முடியாது. குறுவையைத் தொடா்ந்து சம்பா பயிரையும் இழக்கும் அபாயம் உள்ளதால், அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கும் தலைமைச் செயலா் மற்றும் நீா்ப்பாசனத் துறை செயலரின் செயல்பாடுகள் காவிரி-முல்லைப்பெரியாறு உரிமைகளை மீட்பதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.
எனவே, நீா்ப்பாசனத் துறைக்கு அனுபவமிக்க தமிழ்நாட்டைச் சோ்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை செயலாளராக நியமிக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணையை கைவிட்டு, காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் பகுதியிலேயே அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் குறித்து கடந்த 7-ஆம் தேதி அமைச்சா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், முதலமைச்சா் விரைந்து நல்ல அறிவிப்பு வெளியிடுவாா் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகளைத் திரட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்போம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்: பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி கோரும் விவசாயிகள்

‘பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

நாகையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



