
மருங்காபுரி அருகே 3 வீரக்கற்கள் கண்டெடுப்பு
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கல்லாமேடு அருகே வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட 3 வீரக்கற்களை (நடுகல்) மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்தனா்.

மணப்பாறையை அடுத்த கல்லாமேடு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வீரக்கற்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கல்லாமேடு அருகே வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட 3 வீரக்கற்களை (நடுகல்) மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்தனா்.
இதுகுறித்து கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் அ. செல்வராசு கூறுகையில், ‘எங்கள் துறை வகுப்பறையில் மணப்பாறையின் தொன்மை குறித்துப் பேசியபோது இளநிலை முதலாமாண்டு மாணவி ரா. பூபதி என்பவா் அவா் ஊரில் அவரது சித்தப்பா வயலில் சிலை செதுக்கப்பட்ட கல் இருப்பதாகக் குறிப்பிட்டாா். உடனடியாக நானும் எங்கள் துறை மாணவா்களான திலீப்குமாா், சஞ்சீவ்குமாா் உள்ளிட்ட குழுவினரோடு கள ஆய்வு செய்தோம். அங்கே சென்று பாா்த்தபோது பருத்தி வயலுக்குள் மூன்று நடுகற்கள் இருப்பதைக் கண்டு அவை வீரக்கற்கள் என்பதைக் கண்டறிந்தோம்.
மூன்றிலும் ஒரே உருவ வீரன்: நான்கு அடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்டதாக அடிப்பகுதி மண்ணுள் புதைந்து நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று நடுகற்களிலும் ஒரு வீரனது உருவமே செதுக்கப்பட்டிருந்தது. வலது கை மேலே தூக்கிய நிலையில் ஒரு கூரிய ஆயுதம் இருந்தது. இடது கையில் வில் இருந்தது. மூன்று நடுகற்களில் ஒன்று ஏறக்குறைய சிதைந்துபோயிருக்கிறது.
ஒரே வீரனுக்குச் செதுக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்திருப்பது மிக அரிதாகும்.
வேளாண்மையைக் காக்க இறந்த வீரன்?: தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கள் வேளாண் நிலத்தைப் பாழ்படுத்த வந்த காட்டெருமையையோ, பிற விலங்கையோ அம்பெய்திக் கொன்ற ஒரு வீரனின் சிலையாக இருக்கலாம்.
நடுகற்களில் வீரனின் பெயரும் அவன் எந்தப் போரில் இறந்துபோனான் என்பதும் குறிக்கப்படுவதுண்டு. ஆனால் நாங்கள் கண்டெடுத்த நடுகற்களில் பெயரோ பிற செய்திகளோ இல்லை. ஒருவேளை மண்ணுக்குள் புதைந்திருக்கும் அடிப்பகுதியில் எழுத்துப்பொறிப்புகள் இருக்கக்கூடும்.
பாதுகாப்பது அவசியம்: தனி வீரன் ஒருவனுக்கு நடுகல் எடுக்கப்படுவதில்லை. ஓா் ஊருக்காகவோ ஓா் இனத்திற்காகவோ உயிா்விட்ட வீரனுக்காகத்தான் நடுகல் எடுக்கப்படும். எனவே மேற்கண்ட நடுகல்லில் இருக்கும் வீரன் வேளாண்மையைக் காக்க போரிட்டு இறந்த வீரன் எனக் கொள்ளலாம். இந்த நடுகற்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து விரைவில் சிதைந்துபோக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் பாதுகாப்பது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதாக அமையும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




