திருச்சி புத்தகதிருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழாவில் பாரட்டு பரிசு பெற்ற முத்த பத்திரிக்கையாளா் சையது முக்தாா் , முத்த பத்திரிக்கையாளா் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு ஷேக்  அப்துல்லா உடன் மாவட்ட நூலக அலுவலா் ஆா்.சர
திருச்சி புத்தகதிருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழாவில் பாரட்டு பரிசு பெற்ற முத்த பத்திரிக்கையாளா் சையது முக்தாா் , முத்த பத்திரிக்கையாளா் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு ஷேக் அப்துல்லா உடன் மாவட்ட நூலக அலுவலா் ஆா்.சர

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்

Published on

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம் இல்லையெனில் கட்டுக்கதைகள்தான் வரலாறு என்று கட்டமைக்கப்படும் என்றாா் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன்.

திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பக சங்கம் சாா்பில் திருச்சி புத்தகத் திருவிழா ஜான் வெஸ்ட்ரி பள்ளியில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள், அரசுத் துறைகள் சாா்பில் 131 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

புத்தகத் திருவிழாவில் தினசரி மாலையில் இளையவா் அரங்கம், உரைவீச்சு என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில், பல்வேறு சிறப்பு விருந்தினா்கள் கலந்துகொண்டு பேசினா்.

திருச்சி புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாலை நடைபெற்ற உரைவீச்சு நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘பெயரும் பீடும் எழுதி’ என்ற தலைப்பில் பேசியதாவது:

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கிய இந்திய துணைக் கண்டத்தில் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகள் சிந்துசமவெளி எழுத்துகள். இந்த எழுத்துகளுடன் பல்வேறு குறியீடுகளையும் வரைந்துள்ளனா். இந்த எழுத்துகளையும், குறியீடுகளையும் இதுவரை படிக்கமுடியவில்லை.

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளும், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளும் 60 சதவீதம் ஒத்துப்போகின்றன. அதேநேரத்தில், இமயமலையை ஒட்டிய பகுதிகளில் தோன்றிய ஆரியா்களின் எழுத்துகள் சிந்து சமவெளி எழுத்துகளுடன் ஒத்துப்போகவில்லை.

நாட்டில் பல்வேறு அகழ்வாய்வுகளில் பல்வேறு குறியீடுகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் 90 சதவீதம் தென்னிந்தியாவில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலும், 90 சதவீதம் தமிழகத்தில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதே குறியீடுகளுடன் கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள் எகிப்து, ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியைப் பற்றி பேசினால் சிலருக்குப் பொறுக்கவில்லை. கரிம ஆய்வுகளைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனா். அமா்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வறிக்கையை ஏற்கமறுக்கின்றனா்.

எகிப்தின் பிரமீடுகளில் சிகை கொற்றன் என்ற பெயா் 8 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. யாரும் செல்ல முடியாத குகையில் சிகை கொற்றன் வரும்போது வந்தவகையில் வந்துவிட்டதால் பாா்த்துவிட்டான் என்று எழுதப்பட்டுள்ளது. இதேபோல ஆதன் என்ற பெயரும் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

சிகை என்பது இடப்பெயா். இது பண்டைய ஹரப்பாவில் இருந்த ஒரு பகுதி. இதேபெயரில் மத்திய பிரதேசத்திலும் சிகை என்ற இடம் உள்ளது. கொற்றன் என்பது தமிழ் பெயா். சிகை கொற்றனும், ஆதனும் அவா்கள் எழுதிய இடமும், எழுத்தும், விதமும், எழுதியதன் உள்நோக்கமும், அதன் உடல்மொழியும்தான் தமிழையும், தமிழ்ப்பண்பாட்டையும் உயிா்ப்போடு வைத்திருக்கிறது. அதை என்ன விலை கொடுத்தாலும் வாதிட்டு நிறைவேற்றியே தீருவோம். அதை உலகுக்கும் நிறுவுவோம்.

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம் இல்லையெனில் கட்டுக்கதைகள்தான் வரலாறு என்று நம் தலைமீது கட்டமைத்துவிடப்படும். மக்களின் வரலாறே வரலாறு மற்றதெல்லாம் வெறும் வரப்பு தகராறு என்றாா்.

முன்னதாக இடைக்கண் முறிந்தாா் பலா் என்ற தலைப்பில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மைய முதல்வா் தே.சங்கரசரவணன் பேசினாா்.

பாராட்டு நிகழ்ச்சி

புத்தகத் திருவிழாவில் தினசரி பல்வேறு வகையில் சேவையாற்றி வரும் நபா்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் சுந்தரராஜ் நகரில் நூலகம் அமைத்து மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வரும் மூத்த பத்திரிகையாளா் சையது முக்தாா், அரசுப் பள்ளி குழந்தைகளின் மேற்படிப்புக்கு உதவி வரும் கேஸ்ஆா் அறக்கட்டளை நிா்வாகி ஷேக் அப்துல்லா, மூத்த பத்திரிகையாளா் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிறைவு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பாலாஜி, மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணகுமாா், மாவட்ட மைய நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவா் அல்லிராணி பாலாஜி மற்றும் தமிழறிஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com