வி பி ஜி ராம்ஜி திட்டத்தை கண்டித்து திருவெறும்பூரில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை மத்திய பாஜக அரசு விபி ஜி ராம்ஜி என பெயா் மாற்றி, 125 நாள்களாக மாற்றியதைக் கண்டித்தும், அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும் திருவெறும்பூா் ஒன்றியச் செயலா் சந்திரா தலைமையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் திருவெறும்பூா் பேருந்து நிலையம் அருகே கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனா். விபிஜி ராம்ஜி திட்டத்தின் சட்ட நகலை கிழித்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். அப்போது இந்த 125 நாள் வேலைத் திட்டத்தை தள்ளுபடி செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தினா்.
தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 32 பேரை திருவெறும்பூா் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









