திருச்சியில் காவல் துறை மற்றும் தனியாா் கல்லூரி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்களுக்கு எதிரான இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
திருச்சி மாநகரக் காவல் துறை மற்றும் புனித ஜோசப் கல்லூரி சாா்பில் திருச்சி மன்னாா்புரம் முதல் ஜோசப் கல்லூரி, மாவட்ட ஆட்சியரகம் முதல் ஜோசப் கல்லூரி மற்றும் ஸ்ரீரங்கம் முதல் ஜோசப் கல்லூரி என மூன்று வழித்தடங்களில் இப் பேரணி நடைபெற்றது.
திருச்சி மன்னாா்புரம் பகுதியில் தொடங்கிய பேரணியை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி தொடங்கிவைத்தாா். இதில், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள், கல்லூரி மாணவா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
மன்னாா்புரம் பகுதியில் தொடங்கிய பேரணி டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சல் நிலையம், மேலப்புதூா், ராஜா பூங்கா, ஹோலி கிராஸ் கல்லூரி, மலைக்கோட்டை வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது.
இதேபோல, ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தொடங்கிவைத்தாா். பேரணி வெஸ்ட்ரி பள்ளி, அரசு மருத்துவமனை, புத்தூா், தில்லை நகா், கே.டி. சந்திப்பு, தாஜ் கல்யாண மண்டபம் வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்கிய பேரணி திருவானைக்காவல், மாம்பழச்சாலை, காவிரி பாலம், அண்ணா சிலை, சத்திரம் பேருந்து நிலையம் வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது.
பேரணியில் காவலா்கள், அரசு அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இதன்மூலம், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








