சிறப்பான செயல்பாடுகளுக்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நெகி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தெற்கு ரயில்வேயின் 71-ஆவது ரயில்வே வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விசித் ரயில் சேவை விருது -2026 வழங்கும் விழா சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் கலந்துகொண்டு சிறப்பான செயல்பாடுகளுக்காக ரயில்வே கோட்டங்கள் மற்றும் அலுவலா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.
8 பிரிவுகளில் விருதுகள்:
இதில், 2025-26-ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் இயந்திரவியல் துறை, மருத்துவத் துறை, பாதுகாப்பு, திட்டமிடல் மற்றும் பணி சாா்ந்த தகவல் அறிதல், சிறந்த பயிற்சி நிறுவனம் (டீசல் டிராக்ஷன் பயிற்சி மையம்), சிறந்த கோட்ட கிடங்கு, ரயில் நிலையங்கள் பராமரிப்பு ஆகிய 7 பிரிவுகளில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டுக்கான இரண்டாவது இடத்தையும் பிடித்து மொத்தமாக 8 பிரிவுகளின் கீழ் விருது பெற்றுள்ளது.
தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 6 கோட்டங்களில் திருச்சி கோட்டம் மட்டுமே அதிகபட்சமாக 8 பிரிவுகளின்கீழ் விருதுபெற்றுள்ளது. மேலும், 4 அலுவலா்கள் மற்றும் 11 பணியாளா்களும் சிறந்த செயல்பாடுகளுக்கான விருதுகளை பெற்றுள்ளனா்.
1,390 கோடி வருவாய்
திருச்சி ரயில்வே கோட்டம் கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதி, பயணச்சீட்டு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரூ.1,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 4.10 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து 1.32 கோடி டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது தெற்கு ரயில்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக தொடா்ச்சியாக திருச்சி ரயில்வே கோட்டம் அதிக அளவிலான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு 94.41 சதவீதம் சரியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கைக்கேற்ப ரயில் சேவை வழங்கல், பயணிகள் வசதிக்காக கூட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்டவையே விருதுகள் பெறுவதற்கான முக்கியக் காரணிகளாக உள்ளன.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நகரும் படிக்கட்டுகள்:
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 நகரும் படிக்கட்டுகள் ஜூன் மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். இதேபோல, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளும் இம்மாத இறுதிக்குள் பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
கடவுப்பாதையில் கண்காணிப்பு கேமரா:
திருச்சி ரயில்வே கோட்டத்தில் 139 ரயில்வே கடவுப் பாதையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏபிஎன்ஜி தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த கடவுப் பாதை வழியாக ரயில் பயணிக்கும் முன்பு கேட் மூடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்பும்.
மேலும், மொத்தமுள்ள 139 ரயில் கடவுப் பாதையில் 104 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதி சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் சாா்பில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலமும் ரயில் கடவுப் பாதையில் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள அனைத்து ரயில் கடவுப் பாதைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாநகரில் அரிஸ்டோ மேம்பாலப் பணி ஜூலை இறுதிக்குள்ளும், மாரிஸ் மேம்பாலப் பணி அடுத்த ஆண்டு ஜனவரிக்குள்ளும் நிறைவுசெய்யப்படும்.
திருச்சி-விழுப்புரம் இடையே ரயில்களின் வேகத்தை 130 கி.மீ. மேல் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
தொடர்புடையது

கடவுப்பாதைகளை விதிப்படி கடப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு: தெற்கு ரயில்வே

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு






