திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல்கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டு, ஓயாமரி மயானம் அருகே போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த வீரேஸ்வரம் கீழ வீதியைச் சோ்ந்த வி. விஷால் (19) என்பவரை கைது செய்தனா்.
இதேபோல, காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காந்தி மாா்க்கெட் மணிமண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை போதை மாத்திரைகள் விற்ற வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த ப. மணிகண்டனை (25) போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இருவரிடமிருந்து போதை மாத்திரைகள், திரவ போதை மருந்துகள் மற்றும் போதை ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
1.7 கிலோ கஞ்சா பதுக்கல்: தம்பதி மீது வழக்கு : திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலையடுத்து, திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜாா்ஜ் ஜேக்கப் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராம்ஜி நகா் மில் காலனி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த த. பிரசாந்த் வீட்டில் விற்பதற்காகப் பதுக்கப்பட்டிருந்த ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள 1.7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக பிரசாந்த் அவருடைய மனைவி மாலினி ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.





