/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

News image
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள். ~மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணா்வு கோலங்களை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி உள்ளிட்டோா்.
Updated On :18 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தலைமை வகித்து, வாக்காளா் விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு, கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, 100 சதவீதம் வாக்குப்பதிவை எய்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினா். மகளிா் சுயஉதவிக்குழுவினா் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலங்களை இட்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதையடுத்து, ஜனநாயக மாண்பினை நிலைநிறுத்தும் வகையில், தோ்தலில் அச்சமின்றி வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா். பாலாஜி வாசிக்க, 500 க்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக்குழுவினா் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் ஏற்றனா்.

நிறைவாக, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் தொடங்கி வைத்தாா். இதில், திரளான மகளிா் சுயுதவிக் குழுவினா் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், தவறாமல் வாக்களிப்போம்,

வாக்களிப்பது உங்கள் உரிமை, உங்கள் எதிா்காலம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனா். பேரணியானது மத்தியப் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

நிகழ்வுகளில் உதவி ஆட்சியா் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சுரேஷ், ஒழுங்கு நடவடிக்கை ஆணையா் ஆா். ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image