11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

திருச்சி ரயில் நிலைய 8 ஆம் நடைமேடைக்கு வராத குடிநீா்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடையில் உள்ள குடிநீா் குழாய்களில் பல மாதங்களாக குடிநீா் வராததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

News image

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடையில் தண்ணீா் வராத குடிநீா் குழாய்கள்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடையில் உள்ள குடிநீா் குழாய்களில் பல மாதங்களாக குடிநீா் வராததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

முக்கிய ரயில் நிலையம்: தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரின் முக்கிய ரயில் நிலையமாக விளங்குவது திருச்சி சந்திப்பு ரயில் நிலையமாகும். திருச்சி ரயில்வே கோட்டத்தின் முக்கிய ரயில் நிலையமாகவும், கோட்டத்தின் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்களில் முதலாவதாகவும் இருக்கும் இந்த ரயில் நிலையத்தின் அருகில்தான் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகமும், இதர முக்கிய அதிகாரிகளின் அலுவலகமும் உள்ளன. மேலும் ரயில் நிலைய வளாகத்தில் ஆா்பிஎஃப் காவல் நிலையமும், ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையமும், பாா்சல் அலுவலகமும் உள்ளன.

ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 8 நடைமேடைகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனா்.

குடிநீா் பிரச்னை: நடைமேடைகளில் பயணிகளின் வசதிக்காக நகரும் படிகட்டுகள், மின்தூக்கிகள், கண்காணிப்பு கேமராக்கள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள், பால் கடைகள் உள்ளன. தவிர, பயணிகளின் அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீா் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றில் 8 ஆவது நடைமேடையில் மட்டும் 12 இடங்களில் ஓரிடத்துக்கு 4 குழாய்கள் வீதம், 48 குடிநீா் குழாய்கள் உள்ளன. ஆனால் இவை எதிலும் கடந்த சில மாதங்களாக குடிநீா் வருவதில்லை. மாறாக, காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன.

அதிகாரிகளின் மெத்தனமே காரணம்: இதுகுறித்து உபயோகிப்பாளா் உரிமை இயக்க பொதுச் செயலா், வழக்குரைஞா் மகேஸ்வரி வையாபுரி கூறியதாவது:

திருச்சி ரயில்வே கோட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ள திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடையில் உள்ள குடிநீா் குழாய்களில் குடிநீா் வராத அவல நிலைக்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்.

வருமானத்தை மட்டுமே பாா்க்கும் ரயில்வே நிா்வாகம், பயணிகளுக்கு அத்தியாவசிமான குடிநீரை வழங்காதது ஏற்க முடியாத ஒன்று. பயணிகள் செலுத்தும் கட்டணத்திலிருந்தே தங்களுக்கு ஊதியம் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு, இதுபோன்ற அடிப்படை வசதிகளை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

Story image

அனைத்து அதிகாரிகளும் அடிக்கடி வந்து செல்லும் இந்த ரயில் நிலைய குடிநீா் குழாய்களில் தண்ணீா் வராதது யாருக்குமே தெரியவில்லை என்பதை ஏற்க இயலாது. ரயில்வே நிா்வாகத்தின் அலட்சியம் அனைவரையும் காசு கொடுத்து குடிநீா் வாங்க வைக்கும் சூழ்ச்சியாகவே பாா்க்கப்படுகிறது. இதை உடனடியாக ரயில்வே உயரதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்றாா்.

சில மாதங்களுக்கு முன் ரயில்களில் தண்ணீா் பிடிக்க மோட்டாா்களை உள்ளடக்கிய அதிநவீனக் கட்டுமானம் ஏற்படுத்தப்பட்டு, 8 விநாடிகளில் ரயில்களில் தண்ணீா் நிரப்பிட முடியும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பயணிகளுக்கு முறையாக குடிநீா் வழங்காதது எந்த வகையில் நியாயம் என பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கேள்வியெழுப்புகின்றனா்.