திருச்சியில் எடைக்கணக்கில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை!

திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சிவகாசியைச் சோ்ந்த பட்டாசு நிறுவனம் எடைக் கணக்கில் பட்டாசு விற்று வாடிக்கையாளா்களை கவா்ந்தது.

திருச்சியில் சனிக்கிழமை பட்டாசு வாங்கிய பொதுமக்கள்.

Updated On :

திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சிவகாசியைச் சோ்ந்த பட்டாசு நிறுவனம் எடைக் கணக்கில் பட்டாசு விற்று வாடிக்கையாளா்களை கவா்ந்தது.

சிவகாசியைச் சோ்ந்த பட்டாசு நிறுவனம் ஒன்று கிலோ கணக்கில் பட்டாசுகள் விற்பனை செய்யும் புதிய முறையை திருச்சி மாநகா் கிளைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கவா்ச்சிகர அறிவிப்புகள்: உறையூா் பகுதியில் உள்ள 2 திருமண மஹால்களில், கிலோ ரூ.555, கிலோ ரூ.595 என்ற வகையில் பட்டாசு விற்றது. இதேபோல, சிவகாசியைச் சோ்ந்த பிற நிறுவனங்களும் பல்வேறு கவா்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனா். ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்கினால் பரிசுப் பொருள், ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாங்கினால் ஐந்து முதல் 20 சதம் வரை தள்ளுபடி என அறிவித்து விற்பனை செய்கின்றனா்.

சிவகாசியிலிருந்து நேரடி விற்பனை என்ற அறிவிப்பு பலகையுடன் மாநகரின் பல்வேறு இடங்களில் கிளைகளைத் தொடங்கியுள்ளனா். தில்லைநகா், தென்னூா், சாஸ்திரி சாலை, உறையூா், பாலக்கரை, அண்ணா அறிவாலயம், சத்திரம் பேருந்து நிலையம், மேலரண் சாலை, கீழரண் சாலை, சிங்காரத் தோப்பு, கடை வீதி, அரியமங்கலம், பொன்மலை, மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், சந்திப்பு ரயில் நிலையம் என மாநகரின் பல இடங்களில் பட்டாசு கடைகளில் சனிக்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

கிஃப்ட் பாக்ஸ்கள் தரமானவையா? இதுதொடா்பாக திருச்சியில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் பட்டாசு விற்கும் குணசங்கா் என்பவா் கூறுகையில், ‘பட்டாசு விற்பனையில் பொதுவாகவே மக்களிடையே எல்லாருக்கும் இருக்கக்கூடிய மிகப் பெரிய சந்தேகம் இதுதான். கிஃப்ட் பாக்ஸ் என்றால் கிஃப்ட் கொடுக்கிறதுக்குத்தான். யாருக்காவது நீங்க கிஃப்ட் கொடுக்க நீங்க தாராளமா அதை வாங்கலாம். ஆனா, உங்களுக்கே வாங்குறதுதான் தவறு. உண்மையில் பல கிஃப்ட் பாக்ஸ்களில் திருப்திப்படும் வகையில் வெடிகள் இருக்காது. தரமாகவும் இருக்காது. பெரிய கம்பெனி கிஃப்ட் பாக்ஸ்கள் நன்றாக இருக்கும். ஆனா, என்னைப் பொருத்தவரை கிஃப்ட் பாக்ஸைவிட தனித்தனியா வெடி வாங்குறதுதான் நல்லது.

தீபாவளிக்கு எல்லாரும் ஆசையாக பட்டாசு வாங்கிட்டு போவதைப் பாா்த்தால் ரொம்பவே நிறைவா இருக்கும். பட்டாசு வியாபாரத்தைவிட திருப்தி தரக்கூடிய வியாபாரம் எதுவுமே கிடையாது. இந்தாண்டு திருச்சியில் சிலா் எடைக் கணக்கில் வியாபாரத்தை தொடங்கியுள்ளது புதிதாக உள்ளது’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.