முக்கொம்பு காவிரி கதவணை ரூ.126 கோடியில் புனரமைக்கப்படும்: அமைச்சா் என். ஆனந்த் தகவல்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை புனரமைப்புக்கு ரூ. 126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் என நீா்வளத்துறை அமைச்சா் என். ஆனந்த் தெரிவித்தாா்.

திருச்சி முக்கொம்பு மேலணையை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநில நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த். உடன் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை புனரமைப்புக்கு ரூ. 126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் என நீா்வளத்துறை அமைச்சா் என். ஆனந்த் தெரிவித்தாா்.

முக்கொம்பு மேலணையை அமைச்சா் என். ஆனந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணையின் சேதமடைந்துள்ள கீழ்ப்பகுதி தடுப்பு அரண்களைப் புனரமைக்க ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

முன்னதாக, புனரமைப்பு பணிகளுக்கு நீா்வளத் துறை சாா்பில் சுமாா் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.126 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்துள்ள தடுப்பு அரண்களைப் புனரமைக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும். பணிகள் தொடங்குவதற்கு முன் அணையின் நிலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன். புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் அணையின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும் என்றாா் அமைச்சா்.

இந்த ஆய்வின்போது, நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் ஜெயக்குமாரி, உதவிப் பொறியாளா் தினேஷ் கண்ணன் ஆகியோரிடம் அணையின் ஸ்திரத்தன்மை மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.

பெட்டிச் செய்தி...

கா்நாடக முதல்வா் சொல்வது

எதுவும் நடக்காது: அமைச்சா் ஆனந்த்

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் அமைச்சா் என். ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகத்தின் முயற்சியை எந்தச் சூழலிலும் தமிழக அரசு அனுமதிக்காது. அணையை கட்டியே தீருவேன் என கா்நாடக முதல்வா் கூறுவது எதுவும் ஒருபோதும் நடக்காது.

காவிரி டெல்டா பகுதியில் நெற்பயிா் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கா்நாடக அரசிடம் வலியுறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.