சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு! சிறுவன், தந்தை மீது வழக்குப் பதிவு!

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
திருச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் கீழகுமரேசபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம. சுரேஷ் (45). இவா், திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
திருவெறும்பூா் மலைக்கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் திருவெறும்பூா் இந்திரா நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனம் சுரேஷின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், சுரேஷுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கும் தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் இருவரையும் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் சுரேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மேலும், சிறுவனுக்கு முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா், சிறுவன் மற்றும் அவருடைய தந்தை டி. சிவா ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




