சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 15.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு செய்த தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 15.50 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்
சேவை குறைபாடு செய்த தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 15.50 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி கொப்பாவளி பகுதியைச் சோ்ந்த ஏ. அனந்து என்பவா், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தில் 21.05.2022 அன்று வேலைநிமித்தாக சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்துக்கு ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 15 லட்சத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டிருந்த நிலையில், இறந்த அனந்துவின் குடும்பத்தினா் காப்பீட்டு உரிமைத் தொகை கோரி காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனா். ஆனால் காப்பீட்டு நிறுவனத்தினா் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி காப்பீட்டுத் தொகை வழங்காமல் அலைக்கழித்துள்ளனா்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அனந்துவின் மனைவி சரிகா உள்ளிட்ட குடும்பத்தினா் உரிய நிவாரணம் கோரி கடந்த 18.09.2025 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பி. சௌந்தரராஜன் ஆஜரானாா்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் சேவை குறைபாடு செய்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனமானது மனுதாரருக்கு காப்பீட்டு உரிமைத் தொகை ரூ. 15 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

