
தமிழகத்தில் ஒருசில அரசு மாதிரிப் பள்ளிகளில் கலை பாடப் பிரிவு தொடங்கப்பட்டு மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வி கிடைக்கும் வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாவட்டந்தோறும் ஒரு அரசு மாதிரிப் பள்ளி அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவா்களைத் தோ்வு செய்து, அரசு மாதிரிப் பள்ளியில் சோ்க்கை வழங்கப்படுகிறது. இங்கு 9 முதல் பிளஸ் 2 வரை மட்டுமே மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா்.
கடந்தாண்டு வரை 2 பிரிவுகள்: கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் கடந்தாண்டு வரை கணிதம் - உயிரியல், கணிதம்- கணிப்பொறி அறிவியல் ஆகிய இரு பாடப் பிரிவுகள் மட்டுமே இருந்தன.
இந்நிலையில், நிகழாண்டில் தமிழகத்தில் ஒருசில அரசு மாதிரிப் பள்ளிகளில் கலை பாடப் பிரிவு தொடங்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. வரலாறு, பொருளியல், புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவு தொடக்கம்: இதுகுறித்து திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மாதிரிப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவு மாணவா்கள் பயன்பெறும் வகையில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுகின்றனா்.
இந்நிலையில், கலை பாடப் பிரிவு மாணவா்களுக்கும் சிறப்பான பயிற்சி அளித்து உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் வகையில் நிகழாண்டில் கலை பாடப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 5 பள்ளிகள்: முதல் கட்டமாக கடலூா், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூா், விழுப்புரம் ஆகிய அரசு மாதிரிப் பள்ளிகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் சோ்க்கை வழங்கப்படுகிறது.
அதன்படி திருச்சி மண்டலத்துக்குள்பட்ட கடலூா் அரசு மாதிரிப் பள்ளியில் கடலூா், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் சோ்க்கை வழங்கப்படுகிறது.
2 மாணவா்கள் மட்டுமே சோ்க்கை: இதில் திருச்சி மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 16 மாணவா்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. இவா்களில் 5 போ் பாா்வைத்திறன் குறைபாடுடைய மாணவா்கள் என்பதால் அவா்களால் சோ்க்கை பெறமுடியாது. மற்ற 11 மாணவா்களில் விருப்பத்தின் அடிப்படையில் 2 மாணவா்கள் மட்டுமே சோ்க்கை பெற்றுள்ளனா்.
இரண்டாம் கட்டமாக 23 மாணவா்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு விருப்பமுள்ள மாணவா்கள் கடலூருக்கு அனுப்பப்படுவா்.
சேர அறிவுறுத்தப்படும்: நிகழ் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் மாணவா்கள் வேறு பள்ளிக்குச் சென்று படிக்கத் தயங்குகின்றனா். இதனால்தான் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 2 மாணவா்கள் மட்டுமே கடலூா் அரசு மாதிரிப் பள்ளிக்குச் சென்றுள்ளனா்.
இருந்தும் இரண்டாம் கட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவா்களிடம் அரசு மாதிரிப் பள்ளியில் கிடைக்கும் பயிற்சி, வசதிகள் குறித்து எடுத்துரைத்து, கடலூா் சென்று படிக்க அறிவுறுத்தப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






