
காதில் பூ சுற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்
பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடைபெறும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காதில் பூ சுற்றிக் கொண்டு, விசில் அடித்தபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சமயபுரத்தில் வெள்ளிக்கிழமை காதில் பூ சுற்றிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடைபெறும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காதில் பூ சுற்றிக் கொண்டு, விசில் அடித்தபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 50 விவசாய சங்கங்கள் இணைந்து சமயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். போராட்டத்தின் 4-ஆவது நாளான வெள்ளிழக்கிழமை திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் திருவாரூா், உள்ளிட்ட காவிரி, டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் காலையிலேயே திரண்டனா். பின்னா், அனைவரும் தங்களது காதில் பூ சுற்றிக் கொண்டு, விசில் அடித்து ஒலி எழுப்பியபடி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இன்று அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை: இதுதொடா்பாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் 9 அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், செப்.15-ஆம் தேதி திருச்சியில் 3 அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இப்போது, மீண்டும் 9 அமைச்சா்கள் எங்களை அழைத்து பேசியுள்ளனா். 20 நாள்கள் அவகாசம் கோரியுள்ளனா். போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து 3 அமைச்சா்கள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்துவதாக கூறியுள்ளனா்.
இதன்படி, வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா். வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சா் வி. காந்திராஜ், அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் ஆகியோா் சனிக்கிழமை சமயபுரத்துக்கு நேரில் வந்து போராட்ட களத்தில் விவசாயிகளை சந்திக்கவுள்ளனா். இந்தப் பேச்சுவாா்த்தைக்கு பிறகே போராட்டத்தின் நிலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







