மந்தகதியில் செய்யாறு இணை சார்பதிவாளர் அலுவலக கட்டுமானப் பணி

திருவண்ணாமலை, ஜன. 7: செய்யாறு இணைசார் பதிவாளர்-2 புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் பொதுமக்களும், பத்திரப் பதிவுத் துறையினரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மார்க்கெட் அருகே இர
Updated on
1 min read

திருவண்ணாமலை, ஜன. 7: செய்யாறு இணைசார் பதிவாளர்-2 புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் பொதுமக்களும், பத்திரப் பதிவுத் துறையினரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

செய்யாறு மார்க்கெட் அருகே இருந்த பத்திர பதிவுத் துறை இணை சார்பதிவாளர் பழைய அலுவலக கட்டடம் 115 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

செய்யாறு நகரம், மற்றும் புளியம்பாக்கம், பைங்கிணர், குன்னத்தூர், பெருகளத்தூர், மடிப்பாக்கம், இளநீர்குன்றம், அத்தி, உள்பட 52 கிராமங்கள் இந்த அலுவலக விவகார எல்லையில் வருகின்றன.

சொத்துகள் பத்திரம் பதிவு, விற்பனை, பெயர் மாற்றம், பிறப்பு, இறப்புச் சான்று பெறுதல், திருமணம் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் இங்கு நடந்து வருகின்றன.

இணைசார் பதிவாளர் நிலையிலான அதிகாரியின் தலைமையில் 10 ஊழியர்கள் இங்கு பணிபுரிய வேண்டும்.

ஆனால் 6 ஊழியர்களே பணியில் உள்ளனர்.

பழைய கட்டடம் போதிய வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு இதன் பணிகள் தொடங்கின. இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் முற்றுப்பெறவில்லை.

பழைய இணை சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டபோது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூவரச மரங்கள் வெட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாவாடைமூர்த்தி வினாயகர் கோயில் தெருவில் உள்ள தனியார் வாடகை கட்டடத்தில் அலுவலகம் இயங்குகிறது.

ஆனால் இக்கட்டடத்தில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு போதிய வசதி இல்லை. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.

இதுதொடர்பாக பத்திர பதிவு எழுத்தர்கள் சிலர் கூறியது:

தற்போது உள்ள அலுவலகத்தில் முறையாக கட்டணம் செலுத்தி பத்திரம் பதிவு செய்தாலும் பத்திரம் கிடைப்பதற்கு 10 நாள்கள் ஆகின்றன.

மனுக் கட்டணமாக ரூ.1-ம், கம்ப்யூட்டர் வில்லங்க சான்று நகலுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் ஓரே நாளில் தர வேண்டும் என விதி உள்ளது.

ஆனால் அதற்கே 3 நாள்கள் ஆகின்றன. இடைத் தரகர்கள் ஆதிக்கம் காணப்படுகிறது.

முத்திரைத் தாள்

தட்டுப்பாடு

செய்யாறு நகரில் முத்திரைத் தாள்களை விற்க ஓரே ஒரு முகவர்தான் உள்ளார். முத்திரைத் தாள்கள் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அதிகளவில் சொத்துகள்

பதிவு செய்யப்படுவதால் முத்திரை தாள்களை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com