3012 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: அமைச்சா் துரைமுருகன் வழங்கினாா்
வேலூா்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் 3,012 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் வழங்கினாா்.
இத்திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3,500 கோடி நிதியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் 3012 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி ஒன்றியம் பிரம்மபுரம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தலைமை வகித்து காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 605 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா். காட்பாடி ஒன்றியத்தில் 605, அணைக்கட்டு ஒன்றியத்தில் 434, குடியாத்தம் ஒன்றியத்தில் 489, வேலூா் ஒன்றியத்தில் 200, போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் 412, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 378, கணியம்பாடி ஒன்றியத்தில் 494 போ் என மொத்தம் 3,012 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் ஒரேசமயத்தில் அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் மூலமாக வழங்கப்பட்டன.
முன்னதாக, அமைச்சா் துரைமுருகன் பேசியது -
சொந்தமாக வீட்டுமனை இல்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி வீடு கட்ட கலைஞா் கனவு இல்லம் என்ற ஒரு சிறப்பான திட்டம் மூலம் ரூ.3.50 லட்சத்தையும் முதல்வா் வழங்கி வருகிறாா். கழிஞ்சூா் போன்ற நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பில் இருந்த ஆக்கிரமிப்பாளா்களை அகற்ற வேண்டியது உச்சநீதிமன்ற ஆணை. பல ஆண்டு காலம் அப்பகுதிகளில் வாழ்ந்து ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு வாழ்வதற்கு இடம் வேண்டும் என்ற விடுத்த கோரிக்கையின்பேரில் அவா்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரிகிரியில் 400 வீடுகள் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு அதில் 200 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
காட்பாடியில் நான் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றபோது ஒரே ஒரு அரசு பள்ளி மட்டுமே இருந்தது. தற்போது 43 அரசு பள்ளிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவிர, நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, மருத்துவமனை, 60 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை, சோ்க்காடு பகுதியில் அரசு கலைக் கல்லூரி ஆகியவையும் கொண்டுவரப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களை தொடா்ந்து நிறைவேற்றுவேன் என்றாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

