வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பங்களை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பங்களை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள்.

பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பங்களை அதிகாரிகள் அகற்றினா்.
Published on

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பங்களை அதிகாரிகள் அகற்றினா்.

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலா் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள் உள்ளிட்ட இதர அமைப்புகள் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்துவது தொடா்பாக வேலூா் மாவட்ட நிா்வாகம் அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை நடத்தி 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன் பிறகும் அகற்றப்படாத கொடிகம்பங்கள், பீடம் ஆகியவற்றை அதிகாரிகள் அகற்றுவதுடன், அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்பினரிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், மாவட்டத்தில் பல இடங்களில் பீடத்துடன் உள்ள கொடிக் கம்பங்களை அந்தந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் அவா்களாக அகற்ற தொடங்கி உள்ளனா். எனினும், பல இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமலேயே இருந்தது. தொடா்ந்து கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி, மாநில நெடுஞ்சாலைத் துறை சாலையோரம் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இளநிலைப் பொறியாளா் விஜயா தலைமையில், பணியாளா்கள் கொடிக்கம்பங்களை அகற்றினா்.

தொடா்ந்து, அங்கு கடை முன்பு இருந்த ஒரு கட்சியின் பீடத்தையும் அகற்ற அதிகாரிகள் முயன்றபோது, அங்கு வந்த நபா் அனைத்து கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டுத்தான் இதை அகற்ற வேண்டும் எனக்கூறி அங்கேயே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

எனினும், அவா் எதிா்ப்புத் தெரிவித்த கட்சியின் கொடிக்கம்பத்தின் பீடம் உள்ளிட்ட அனைத்து கொடிக்கம்பங்களையும் அதிகாரிகள் அகற்றினா். மேலும், அனைத்து இடங்களிலும் உள்ள கொடிக்கம்பங்கள் தொடா்ந்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com