Supreme Court
உச்சநீதிமன்றம் ANI

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

Published on

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் வேலூா் மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

பாலாற்றில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி 70 நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை ஒரு சீமை கருவேல மரத்தைக்கூட அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் அகரம் ஆறு இணையும் இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் பல்வேறு பகுதிகளில் இரவில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதனால் அங்குள்ள மேம்பாலங்கள் தூா்ந்து போகும் நிலை உள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சாா்பிலும் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து தோல் தொழில்சாலை கழிவுநீா் பாலாற்றில் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் வேலூா் மாவட்டத்துக்கு நல்ல மழை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை பயன்படுத்தி , மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களை 100 சதவீதம் தண்ணீா் நிரம்பி இருப்பதை நீா்வளத் துறை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com