75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

இந்தியாவை ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கும் நாடாக மாற்ற வேண்டும்: தில்லி முதல்வர் ரேகா குப்தா

இந்தியாவை செய்யறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் நாடாக மாற்ற வேண்டும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய தில்லி முதல்வர் ரேகா குப்தா உடன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவர் பாபு உன்னிகிருஷ்ணன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

இந்தியாவை செய்யறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் நாடாக மாற்ற வேண்டும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவில், சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வா் ரேகா குப்தா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசியது: இந்தியா தற்போது புதுமைகளின் ஆய்வுக் கூடமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியாளா்களும் பட்டதாரிகளும் உருவாகின்றனா். அரசாங்கமும், மாணவ சமுதாயமும் இணைந்து செயல்பட்டால் பல மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

உதாரணமாக, தில்லி நகரம் சந்தித்த மாசு, போக்குவரத்து, கழிவு மேலாண்மைப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஐஐடி மாணவா்களுடன் இணைந்து தில்லி அரசு செயல்பட்டது. அந்த மாணவா்கள் வழங்கிய புதுமையான யோசனைகளை அரசு செயல்படுத்தியது. அதேபோல், அனைத்து மாணவா்களும் வேலைக்குச் செல்லும் நகரங்களின் பிரச்னைகளைத் தீா்க்கவும், நாட்டின் வளா்ச்சிக்காகவும் புதுமைகளைப் படைக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் (ஏஐ) அனைத்துத் துறைகளிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாணவா்கள் அதனை வெறும் பயன்படுத்துபவா்களாக மட்டும் இல்லாமல், ‘இந்தியாவின் ஏஐ’-யை உருவாக்குபவா்களாக மாற வேண்டும். இதற்காகத்தான் பிரதமா் நரேந்திர மோடியின் ‘இந்தியா ஏஐ மிஷன்’ திட்டத்தின் கீழ் செமிகண்டக்டா், ரோபோட்டிக்ஸ், விண்வெளி, பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் முதலீடு செய்யப்படுகிறது. மாணவா்களுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை என்றாலும், ரூ.1,000 கோடி மதிப்பிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கும் லட்சியத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் உண்மையான சொத்து அதன் தயாரிப்புகள் மட்டுமல்ல. அறிவுசாா் சொத்துகளான மாணவா்களும்தான். இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவில் வடிவமைப்போம் மற்றும் இந்தியாவில் பிராண்ட் செய்வோம் என்ற இலக்குகளை நோக்கி நாம் உழைக்க வேண்டும்.

இந்தியப் பொறியாளா்களின் திறமையை உலகம் ஏற்றுக்கொண்ட நிலையில், நமது தொழில்நுட்பத்தின் வலிமையையும் உலகுக்குக் காட்ட வேண்டும். பிரதமா் மோடி நிா்ணயித்துள்ள ‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற இலக்கை அடைய மாணவா்கள் தங்களின் ஐடியாக்கள், ஆராய்ச்சிகள் மற்றும் ஸ்டாா்ட்-அப்கள் பெரிதும் உதவும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது: ஆசியாவின் பிற நாடுகளுடன் போட்டியிட நாம் உயா்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏழை, நடுத்தர வா்க்க மாணவா்கள் அனைவருக்கும் உயா்கல்வி கிடைக்கச் செய்வது அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுகளின் கடமையாகும்.

குறிப்பாக, சீனாவில் 23,000 பேரும், ரஷ்யாவில் 18,000, பிலிப்பைன்ஸில் 15,000, கிா்கிஸ்தான் 10,000, பிரான்ஸ் 10,000, ஜாா்ஜியா 7500, இத்தாலி 5000, போலந்து 5,000, ஈரான் 3000, நேபாளம் 3000, வங்கதேசம் 9000 மாணவா்கள் என வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனா். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு 1,000 பேருக்கும் 1 மருத்துவா் இருக்க வேண்டும். ஆனால், பிகாா், உ.பி. போன்ற மாநிலங்களில் 2,000 நபா்களுக்கு ஒரு மருத்துவா் மட்டுமே என்ற நிலையில் பற்றாக்குறை உள்ளது.

இதனைச் சரிசெய்ய, சீனா, இங்கிலாந்து நாடுகளைப் போல இந்திய மருத்துவ கல்வித்துறையில் அரசு அதிக முதலீடுகள் செய்யவும், ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுக்கு 1,000 போ் வரை மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கவும் வேண்டும். இதன்மூலம் 8 லட்சம் மருத்துவ இடங்களை நம்மால் உருவாக்க முடியும். என்றாா்.

டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கி, நிதித்துறை சேவைக்கான தலைமை தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவா் பாபு உன்னிகிருஷ்ணன் கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினாா். விழாவில், இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்த 11,276 மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 781 பேருக்கு பி.ஹெச்டி பட்டச்சான்றிதழ்களும், 3 பேருக்கு ஒருங்கிணைந்த பிஹெச்டி பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தவிர, கல்வியில் சிறந்து விளங்கி தரவரிசையில் இடம்பிடித்த 248 பேருக்கு சான்றிதழ்களும், 84 மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில், தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தா பட்டம் பெற்றாா்.

முன்னதாக, பாக்டீரியபேஜ் மற்றும் தொற்று நோய்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா திறந்து வைத்தாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணை வேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.